பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

27


உணர்ச்சிப் பகுதி

தோஸ்தோயெவ்ஸ்கி என்னும் ரஷிய நாவலாசிரியர் (19ஆம் நூற்றாண்டின் நடுக்காலத்தில் எழுதியவர்) கால்ஸ் வர்த்தியின் படைப்பு முறையினின்றும் பெரிதும் மாறுபட்டவர். அவருடைய கதாபாத்திரங்கள் முதலில் சிந்திக்கின்றனர். பின்னர் சில நிகழ்ச்சிகள் மூலம் உணர்ச்சி வெள்ளத்துள் மிதக்கின்றனர். பின்னர் சிந்தனை குறைந்துபோய் உணர்ச்சி வெள்ளத்தால் அடித்துச்செல்லப்படும் படகுபோல அவர்கள் செயல்படுகிறார்கள். உணர்ச்சியால் செயல்பட்டு ஆபத்து விளையும்போது மீண்டும் சிந்திக்கிறார்கள். அவர்களது காலத்துச் சமூக நிலையை மாற்ற விரும்பும் புரட்சி விரும்பிகள், உணர்ச்சியால் பெரிதும் உந்தப்படுகிறார்கள். செய்வது அறியாது (சிந்தனைக் குறைவால்) குழம்பிப்போய் உணர்ச்சி இழுத்த வழியில் செல்லுகிறார்கள். தவறான வழியில் சென்று ஆபத்துக்குள்ளாகும் கதாபாத்திரங்கள் வேறு கதாபாத்திரங்களால் உணர்ச்சி வேகத்திலிருந்து காப்பாற்றப்பட்டு, ஆறுதல் பெறுகிறார்கள். அவரது கடைசி நாவலான 'காரமளால் சகோதரர்களில்' உணர்ச்சியும் சிந்தனையும் உடைய சில கதாபாத்திரங்களை அவர் படைத்துள்ளார். அவர்கள் உணர்ச்சிச் சூழலில் சிக்கிக்கொண்ட கதாபாத்திரங்களின் நடுவே செயல்படுகிறார்கள். சிந்தனையால் மற்ற கதாபாத்திரங்களை மாற்ற முடியாமல் தோற்றுப்போகிறார்கள். சமூகச் சிந்தனை என்னும் கரை வலுவாக எழுப்பப் படாததால் உணர்ச்சிவெள்ளம் அதனை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. ஆயினும் தமது சமூகச் சூழ்நிலையில், ரியலிச கதாபாத்திரங்கள் தங்கள் பரம்பரை இயல்பூக்கங்கள், உணர்ச்சி கள், சமூக மதிப்புச்சிந்தனைகளோடு, இவற்றை எதிர்த்து முன்னேறும் புரட்சிக்கருத்தை உணர்ச்சி வேகமாக மாற்றிக் கொண்ட இளைஞர்களோடு மூர்க்கமாகப் போராடுகிறார்கள். இங்கு ரியலிசம் காணப்படுகிறது. உணர்ச்சி மிகுதியால் இயக்கப்படும் கதாபாத்திரங்கள் சென்டிமென்டலாக இருக்கிறார்கள்.

சிந்தனை-உணர்ச்சிகளின் இணைப்பு

உணர்ச்சிகளையும் சிந்தனையையும் இணைத்துச்செயல்படும் கதாபாத்திரங்களையும் உணர்ச்சிச்சூழலில் சிக்கிக் கொண்டு சிந்தனையால் அதனின்றும் மீளமுடியாமல் தவிக்கும் கதைமாந்தர் வகைகளையும் டால்ஸ்டாய் படைத்துள்ளார்.