பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

29


தெரிந்துகொள்கிறான். மிகப்பெரிய அதிர்ச்சியடைகிறான். சட்ட நுணுக்கங்கள் சமூகவியல் ஆராய்ச்சியாக மாற்றம் அடைகின்றன. நெக்லியூடாவ் சிந்திக்கிறான். தனது சமூக நிலையையும் அவளது சமூக நிலையையும் அவளுடைய பாதுகாப்பற்ற நிலையையும் எண்ணுகிறான். தனது செயலால் தான் அவள் இந்நிலையில் கொலைசெய்த குற்றவாளியாகக் கோர்ட்டில் நிற்கிறாள் என்பதை உணருகிறான். ஜூரர்களின் விவாதத்தின்போது அவளை விடுதலை செய்யப் பெரிதும் முயற்சி செய்கிறான். அவளைக் காமந்தீர்க்கும் உபாயமாகப் பயன்படுத்திய விலங்கினத்தனமான உணர்ச்சிக்குப் பதில் சமூக ஆராய்ச்சிச் சிந்தனை அவனது சிந்தனையற்ற உணர்ச்சிகளை மாற்றுகிறது. சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி அவளை விடுதலை செய்விக்க முயலுகிறான். முடியவில்லை.

அவள் நான்கு ஆண்டுகளுக்கு சைபீரியாவிற்கு அனுப்பப் படவேண்டும் என்று தண்டனை கிடைக்கிறது. இவன் தண்டனை பெற்ற மாஸ்லோவாவைச் சந்திக்கிறான். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளுகிறான்தனது பொறுப்பை அவளுக்கு அறிவிக்கிறான். அவளுடைய வாழ்க்கையின் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்ளுவதாக உண்மையான உணர்ச்சியோடு சொல்லுகிறான். அவள் மறுத்துப் பேசுகிறாள். அவன் அவளை விடுதலை செய்ய அப்பீல் செய்கிறான். பெருஞ் செலவு செய்கிறான். அவளை சைபீரியாவிற்கே அனுப்பிவிடுகிறார்கள். இவனும் அவளைப் பின்தொடர்ந்து செல்லுகிறான். அவன் சிறையிருக்கும் ஊரில் தங்கி அவளுடைய தண்டனையைத் தானும் அனுபவிக்கிறான். ஒவ்வொரு சமயம் சிறையிலிருந்து அவளைக் காவலோடு வெளிக்கொணரும் போது அவளைச் சந்தித்துப் பேசுவான். தோழமையுணர்ச்சியோடு பழகுவான். விடுதலையடையும் நாளில் அவன் மகிழ்ச்சியோடு அவளோடு மாஸ்கோவிற்குத் திரும்பக் காத்திருக்கிறான். அவன் தனது குற்றத்திற்காக அவள் சிறையில் இருந்த காலத்தில் சிறைக்கு வெளியேயிருந்த சிற்றுாரில் அவளுக்காக நான் காண்டுகள் காத்திருந்தான். அவளை விடுதலை நாளில் சந்திக்கிறான். அவள் மாஸ்கோ திரும்பச் சம்மதிக்கிறான். ஆனால் அவனோடு சேர்ந்து வாழச் சம்மதிக்கவில்லை.

டால்ஸ்டாயின் இந்தக் கலைப்படைப்பில் சிந்தனையும் உணர்ச்சியும் அளவாகவுள்ளன. கலைப்படைப்பு என்ற முறையில் உணர்ச்சி அம்சம் அதாவது வாசகன் மனதில் உணர்ச்சி களைத் துரண்டும் அம்சம்-உணர்ச்சிகளைப் பயன்படுத்தும் அம்சம் நிறைவாக இருக்கிறது. சிந்தனைப் பாதையில் உணர்ச்சி சமாந்திரமாகச் செல்லாமல் சிந்தனையும் உணர்ச்சி