பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

33


மனித உறவுகள் பற்றிய எழுத்து ஓவியமாக இந்த நாவல் காணப்படுகிறது. இந்த நாவலை, உணர்ச்சி, சிந்தனை ஆகிய உளக்கூறுகளின் திறமையான பின்னல் என்று கூறலாம். இம் மனிதக் கூறுகள் சமூகச்சூழல் என்னும் நிலத்தில் முளைத்து வளர்கின்றன.
ரசாயனவியலில் சோடியம் என்னும் திண்மையான, எரியக்கூடிய உலோகமும் குளோரின் என்ற கார நெடியுள்ள, நீலமஞ்சள் நிறமுடைய விஷவாயுவும் கூடி சோடியம் குளோரைட் என்ற உப்பைத் தருகின்றன. இச்சேர்மம் அதன் பகுதிகளின் தன்மையினின்றும் பெரிதும் மாறுபட்டிருக்கின்றன, உப்பு வெள்ளையானது; ஸ்படிக ரூபம் கொண்டது. நீரில் கரையக்கூடியது. இதுபோலவே உணர்ச்சியும் சிந்தனையும் ஒன்றுகூடி (ரசாயனச்சேர்க்கை போல) மூலகங்களின் தன்மைகள் மாறி ஓர் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கின்றன.

கலைக்கருத்தும் கலைப்படைப்பும் கலைஞன் கலைப்படைப்பில் ஒரு கருத்தைச் சொல்வு நினைக்கிறான். இக்கருத்தே கலைப்படைப்பாகிவிடாது, நினைத்த கருத்துக்கு வேறுபட்ட வழியில் கலைப்படைப்பின் அழகியல் தருக்கம் அவனை இழுத்துச் சென்றுவிடலாம். தான் வெளியிட நினைக்கும் கருத்து முழுவதையும் தனது படைப்பில் இடம்பெறச்செய்ய முடியாது.
டால்ஸ்டாய் தமது நிலவுடைமை வர்க்கத்தின் சிதைவுக் காலத்தில் காதலுறவையும் இன்பத்தையும் பற்றிச் சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார். 'கற்பு மணமோ அல்லது. களவு மணமோ மனிதனது ஆன்மாவுக்கு நிறைவு தராது' என்பதுதான் அம்முடிவு. இக்கருத்தைக் கலைப்படைப்பாக 'குரூயெட்ஸர்ஸொனேட்டா' என்ற குறுநாவலில் வெளியிட எண்ணினார். தமது காலத்தில் தமது வர்க்கத்தின் நெருக்கடிக்குத் தீர்வாக இக்கருத்தை அவர் முன் வைத்தார். அவர் குறுநாவலை எழுத ஒரு கலைத்திட்டத்தைப் படைத்தார். இக் கலைத்திட்டம் நாவலாக உருவாகும்போது கதை மாந்தர்களின் நிகழ்ச்சிப்போக்கில், டால்ஸ்டாயின் கலைக்கருத்தின் வரம்புக்கு அப்பால் நாவல் சென்றுவிட்டது. கதை முடிவில் இதற்கு நேர் முரணான கருத்து வாசகனுக்குத் தோன்றுகிறது. கதை மாந்தர்களின் சமூகச் சூழலைப் படைக்கும்போது டால்ஸ்டாய் அருவருக்கத்தக்க நிலைமைகளைத் சித்தரித்தார் இந்நிலைமைகளில் 'காதலிக்கும் உரிமை பெரும்பான்மையோருக்கு இல்லை என்று கண்டார். காதலிக்கும் உரிமைக்கு விலையாக உயிரையே கொடுக்கவேண்டிய நிலைமை உள்ளது 49/3