பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நா.வானமாமலை


என்ற கருத்து படைப்பின் நோக்கமாக அமைந்தது. தாம் சொல்ல வந்த கருத்துக்கு முரண்பட்ட வேறொரு கருத்து, படைப்பின் தருக்கத்தால் தோன்றியது. தமது துவக்கக் கருத்தைப் படைப்பின்போது டால்ஸ்டாய் மாற்றிக்கொண்டார். கலைக்கருத்து, படைப்பின்போது சில படைப்பாளிகளுக்குத் தோன்றுகிறது. படைப்பாளியின் கருத்துக்கும் புற வாழ்க்கையின் இயக்கத்திற்கும் வேறுபாடு இருந்தால் படைப்புக்கு முன் உருவான கருத்து, புறஉலகைக் கலையில் படைக்கும் போது, சிறந்த கலைஞனின் உள்ளத்தில் தோன்றும் கதை மாந்தர் இயல்புப்போக்கும் அவர்களது நிகழ்ச்சிப்போக்குகளும் அக்கருத்தை மாற்றி, புறஉலக தர்க்கத்தால் தோன்றிய ஒரு புதிய கருத்தைப் படைப்பாளியின் உள்ளத்தில் தோன்றச் செய்யும். படைப்பாளியின் அகஉலகக் கருத்துக்கன் புற உலக இயக்கத்தோடு மாதுபடும்போதுதான் இந்த முரண்பாடு தோன்றும்.
பால்சாக் என்ற மாபெரும் எழுத்தாளர் அரசியலில் மன்னர் ஆட்சியை ஆதரித்தவர். அவர் அக உலக உள்ளடக்கம், மன்னர் ஆட்சிக்கு ஆதரவான கருத்துக்களே. ஆயினும் கலைப் படைப்புகள் வழி ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளை, அரசும் ஆளும் வர்க்கமும் தீர்க்கமுடியாமலிருப்பதைக் கண்ட பால்சாக் தமது கருத்தைக் கலைப்படைப்பில் மாற்றிக் கொண்டார். தன் படைப்பின் அழகியல் தர்க்கத்துக்குக் கலைஞர் துரோகம் செய்யவில்லை. துனய கலை வெள்ளம், அகவுலக அரசியல் கருத்துக்களை அடித்துச் சென்றுவிடும்.
புறஉலகின் உண்மைகளை, கலைக்கண்ணால் காணும் மாபெரும் கலைஞன், தனது கருத்துக்கள் எவையாயினும் புற உலக உண்மையைச் சித்தரிக்க விரும்புவான். கலைஞனது உண்மைப் பற்றுதான் படைப்பில் கதைமாந்தர், நிகழ்ச்சி, சூழல்களாக உருவாகி இயக்க ஆற்றல்களாகச் செயல்படுகிறது. அதன் தாக்கத்தால், படைப்பாளியின் அகவயக்கருத்துக்கள் செயல்பாடில்லாமல் அமிழ்ந்து போகின்றன. தன் காலத்து விவசாயிகளின் துன்பமயமான பிரச்சினைகளுக்குத் தன்னுடைய அகவயக் கருத்துக்களையும் மத உணர்ச்சிகளையும் தீர்வாகக் காட்டிய டால்ஸ்டாய் கலைக்கண்ணோடு விவசாயி மக்களின் வாழ்க்கையைக் கண்டார். ரியலிசச் சித்திரங்களைப் படைத்தார். அவர்களுடைய துன்பங்களுக்குக் காரணம் நிலவுடைமையாளரான தம்முடைய வர்க்கமே என்று கண்டார். காந்தியடி களைப்போல, இவர்கள் மனம் மாறி நிலத்தை விவசாயிகளுக்குக் கொடுத்துவிட்டால் விவசாயிகளின் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்துபோகும் என்று அவருடைய கட்டுரைகளில்