பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நா.வானமாமலை


துன்பங்களையெல்லாம் கூறுகிறாள். அதேசமயம் ஆடைகளையும் அணிகலன்களையும் நினைவில் கொண்டிருந்த ஆளுநர் மனைவி குழந்தையை மறந்துவிட்டதையும், இப்போது சொத்துக்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மீண்டும் குழந்தை நினைவு அவளுக்கு வந்திருப்பதையும் வேலைக்காரி சுட்டிக்காட்டுகிறாள். இருவரும் நீதிமன்றத்திற்குப் போகிறார்கள். அங்கு நீதிபதி பழங்கதைகளில் வரும் தீர்ப்பையே கூறுகிறார். வளர்த்த தாய் இழுக்க மறுக்கிறாள். பெற்ற தாய் இழுக்கச் சம்மதிக்கிறாள். சொத்துக்குக் குழந்தை வேண்டும் என்று வெளிப்படையாகவே தனது எண்ணத்தைச் சொல்லி வளர்த்த தாயிடம் குழந்தையைக் கொடுக்கும்படி நீதிபதி தீர்ப்புக் கொடுக்கிறார்.
சமூக மதிப்பு அல்லது கருத்து மாறுகிற காலகட்டத்தில் நாடகத்தின் பிரதானக் கருத்தும் மாற்றப்படுகிறது. பண்டையக் கருத்து பெற்ற தாய்தான் இயல்பூக்கத்தால் (instinct) குழந்தையைக் காப்பாற்றுவாள்' என்பதுதான். அக்கருத்தில் வர்க்கத் தன்மையின் பாதிப்பு இல்லை. சொத்துக்கு வாரிசு என்ற எண்ணத்தில் குழந்தையைப் பாதுகாப்பது என்ற சிந்தனையில்லை. புதிய கருத்து கால மாற்றத்தாலும் சமூக மாற்றத்தாலும் ஏற்படும். வாரிசு என்ற குழந்தையைத்தான் பெற நினைக்கும் தாயையும் தற்செயலாகக் கிடைத்த குழந்தையைப் பல துன்பங்களுக்கிடையே பாதுகாத்த மனிதாபிமானத்தில் குழந்தையைப் பிரிய மனமில்லாத வளர்ப்புத் தாயையும் நாடகத்தில் சந்திக்கிறோம். பழைய மதிப்புகள் மாறிவிட்டன. புதிய மதிப்புகள் வளருகின்றன. இப்புதிய மதிப்பின் அங்கீகாரமே, புதிய தீர்ப்பு. எனவே தீர்ப்பு மறைமுகமாக எந்தக் கருத்துக்கு என்பது நாடகத்தில் வெளியாகிறது.

கலைஞன் தீர்ப்பு(Judgment message)

மேற்காட்டிய உதாரணம் கலைஞன் தீர்ப்பு என்ற கருத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுகிறது. தனது படைப்பு பற்றி, படைப்பின் கதை மாந்தர்கள் பற்றி, கதை நிகழ்ச்சிப் போக்கு பற்றி படைப்பாளி என்ன நினைக்கிறான்? ஒவ்வொரு கதை மாந்தரையும் வாசகன் எப்படி நோக்கவேண்டும் எனப் படைப்பாளி எண்ணுகிறான்? -
சில காப்பியங்களில், நாவல்களில், துவக்கத்திலேயே கதையின் நோக்கம் குறிப்பிடப்படும். இராமாயணம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய காவியங்களில் கதையின் நோக்கம் தெளிவாக்கப்படுகிறது. ஆயினும் கதை மாந்தர், நிகழ்ச்சிகள் பற்றிய தீர்ப்பை வாசகன்தான் முடிவில் அளிக்கிறான்.