பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

51


கூறுகள் உருவத்தின் மிக முக்கியமான அம்சங்களாகும். ஒரு கலைப் படைப்பில் இவற்றைத் தனித்தனியே பிரிக்க முடியாது. சீராக ஒழுங்குபடுத்தப்பட்ட இசைவும் கவனமாக உருவாக்கப்பட்ட கதைப்பின்னலும் கலையுணர்வோடு இணைக்கப்படும் பொழுது சிறந்த கலையுருவம் தோன்றுகிறது. இவையே கலைப்படைப்பின் முக்கியமான கூறுகள்.

உள்ளடக்கமும் உருவங்களின் ஒருமையும்

உள்ளடக்கமும் உருவங்களின் இணைப்பும் ஒருமையுமே ஒரு கலைப் படைப்பை உள்ளம் கவரும் தன்மையுடையதாக்குகின்றன. சில நாவல்களில் உள்ளடக்கச் சிந்தனை முனைப்பாயிருக்கிறது. அதாவது கதைப்பின்னல் நிலைக்குமுன் தோன்றும் தெளிவற்ற, ஆனால் வலுவான சிந்தனையாக இருக்கிறது. இதையே அப்படியே எழுதினால் உருவமற்றதான ஒரு படைப்புதான் கிடைக்கும். மாறாக உள்ளடக்க வலு இல்லாமல் பலவித உருவ ஜாலங்களைச் செய்யலாம். உருவம் ஒரு சாதனம். ஒரு படைப்பாளியின் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியும் சிந்தனையுமே ரசிகனுடைய உள்ளத்திற்குப் பரவுதல் வேண்டும். இதற்கொரு கருவிதான் உருவம். இக் கருவி குறைபாடுடையதாக இருந்தால் சிறந்த முறையில் உணர்ச்சி-சிந்தனைக் கலவையை ரசிகன் உள்ளத்தில் தோற்றுவிக்க இயலாது. உள்ளடக்கத் தெளிவுதான் கலையின் உயிர்த் துடிப்பு. இவ்வுயிர்த்துடிப்பு கலையுருவம் பெற்றால்தான் அது பிற உள்ளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். "உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே இனிமை உண்டாகும்" என்கிறார் பாரதியார். சரியான உருவம் பெறாத ஒர் உணர்ச்சி பிறருக்குப் பரவுவதில்லை. பரவினாலும் நீடித்து நிலைப்பதில்லை. எனவே கலைப்படைப்பில் உள்ளடக்கத் தெளிவும் உருவச் சிறப்பும் இருத்தல் வேண்டும். உள்ளடக்கம் உருவத்தின் மூலம் வெளிப்படுவதால் இரண்டும் இணைந்துதான் கலைப்படைப்பு ஒருமை(unity of content and form) தோன்றுகிறது.
உள்ளடக்கமற்ற உருவம், உயிரற்ற உடல் போலத்தான். தற்கால ஜனரஞ்சகக் கதைகளில் சமூக முக்கியத்துவமுடைய உள்ளடக்கம் காணப்படுவதில்லை. உருவத்தை இக்கதையாசிரியர்கள் போலியாகப் படைக்கிறார்கள். அற்ப விஷயங்களை, திறமையான கதைப்பின்னல் மூலம் கனமுடையதாகச் செய்ய முயலுகிறார்கள். இக்கதையில் நாசூக்கான உருவம் இருக்கிறது என்று சொல்லுவது ஒரு ராட்சசப்பிறவியை மனித உருவமாகக் காண்பதேயாகும். தற்காலத்தில் உருவத்தை