பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

59


கூறுகள் புற உலகத்தின் தாக்கம். அகவயக்கூறு, புற உலகத் தாக்கத்தின் அகவய எதிரொலி, கலையில் அகவய எதிரொவி, மிக முக்கியமானது. இவ்வெதிரொலியின் பல வடிவங்களே பல வகைக் கலை உருவங்கள்.
நிறங்கள், கோடுகள், சொற்கள் முதலியவை புற உலகில் உள்ளன. இவை மனிதன் மீது தாக்கம் செலுத்துகின்றன. விலங்குகளும் இவற்றின் தாக்கத்திற்கு உட்படுகின்றன. இத் தாக்கங்களின் எதிரொவி மனிதனில் வேறாகவும் உள்ளன.

மனிதனின் ஐந்து புலனுணர்வுகள் வரலாற்றுக் காலம் முழுவதும் வளர்ச்சி பெற்று இன்றைய நிலைக்கு வந்துள்ளன

என்று மார்க்ஸ் எழுதினார். இதன் பொருள் யாது? மனிதனது புலனறிவுச் செயலின் (புலன்களின் வளர்ச்சி, அவற்றின் அறிவு பெறும் தன்மை) இயல்புகளும் சிறப்புத் தன்மைகளும் சமூக வரலாற்றில் மனிதனது செயல்பாட்டால் (Praxis) தோன்றியதே என்பது மார்க்சின் கருத்து. சமூக வரலாற்றுத் தேவை களுக்கு ஏற்பப் புலனறிவுப் பொறிகளும் புலனுணர்வுச் செயலும் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதேயாகும். மனிதனது புலனறிவுத் தோற்றம் அவனது மனதில் பல உருவங்களில் ஏற்பு வினைகளைத் தோற்றுவிக்கிறது (Reactions). எனவே புலனுணர்வு (Sensing), புலனறிவு(Sensation, perception) ஆகிய அறிதல் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கலை உருவத்தைத் தீர்மானிக்கின்றன. ஆயினும் பலவகைப்பட்ட கலையுருவங்களுக்கு அடிப்படை எது என்று நாம் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. உலகின் பலவேறுபட்ட தன்மை களின் இடையே கலையின் வஸ்துவை அதன் பன்முகத் தன்மையில் வெளியிடுவதற்கு ஒரேவிதமான கலையுருவம் போதாது. உலகின் எல்லையற்ற இயல்புகளை வெளியிடப் பலவகைப்பட்ட கலையுருவங்கள் அவசியமே.
மிகச்சிறந்த நாவல்களும் காப்பியங்களும் அவ்வத்துறை களில் சிறந்தவை என்று கருதப்படுவது மட்டுமின்றி வேறுபல உருவங்களிலும் மாற்றியமைக்கப்படுகின்றன. ஒதெல்லோ என்னும் நாடகம் வேறோர் உருவத்தைப் பெற்றது. அதாவது திரைப்படமாக்கப்பட்டது. ராமாயணக் காப்பியம் நாடகமாகவும் கூத்தாகவும் பாவைக்கூத்தாகவும் திரைப்படமாகவும் பல கலையுருவங்களில் வழங்கிவருகிறது. சோவியத் யூனியனில் ’பாலே' என்ற இசை நாடகமாகவும் ஆடப்பட்டது. பொதுக்