பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

67


அவன் உள்ளத்தில் ரயிலின் மீது வெறுப்பை உண்டாக்குகிறது. ரயிலை 'அரக்கன்' என்றும் 'கயவன்' என்றும் ஏலாக் கோபத்தில் இந்த ஜூலு இளைஞன் திட்டுகிறான்.
ரயில் உறுமுகிறதாம், தீமை விளைக்கும் காட்டு விலங்கு போல. பெண்களை ஆண்களிடமிருந்து பிரிப்பதால், இரக்கமற்ற 'அரக்கனாம்'. குடும்பத்தைச் சிதைப்பதால்-காதலர்களைப் பிரிப்பதால் அது கயவனாம்.
இந்த இளைஞன் படிப்பு வாசனையில்லாதவன். ரயில் கூலியாக வருமுன்னர் இயற்கையோடு இசைந்து செழித்து வளர்ந்த மலைக்காடுகளில் அலைந்து திரிந்தவன். மலையில் கிடைக்கும் பொருள்களால் அமைக்கப்பட்ட குடிசைகள் கொண்ட மலைக்கிராமம் ஒன்றில் வாழ்ந்தவன். இவன் தனது பாடலைப் பொதுவான பேச்சில்தான் சொல்லிசைத்து அமைத்துள்ளான். சமுதாய வாழ்க்கையையே அழித்துவிடும் முதலாளித்துவத்தின் சின்னமாகிய ரயிலை அவன் அரக்கன், கயவன் என்று திட்டுகிறான். இப்பாடலைப் பாடும்போது அவன் கைகளையும் கால்களையும் ஆட்டுகிறான். பொதுவான பேச்சு, உணர்ச்சியைச் சுமந்துகொண்டு கால் கை அசைவோடு, பாடல்-பேச்சாக மாறுகிறது. இப்பேச்சில் ரயிலைத் தங்கள் துன்பத்துக்குக் காரணமான அரக்கனாகவும் கயவனாகவும் மாற்றுகிறான். இது மந்திர நிகழ்ச்சி1
மயோரிகள் என்ற இனக்குழு மக்கள் அமெரிக்காவை அடுத்த ஒரு தீவில் வாழ்கிறார்கள். இவர்கள் வேட்டையாடியும் புராதனப் பயிர்த்தொழில் செய்தும் உணவு பெறுகிறார்கள். கலப்பையோ, மாடுகளோ இவர்களுக்குக் கிடையாது. புல்கொத்தி மாதிரி ஒரு கருவியைப் பூமியைத் தோண்டப் பயன்படுத்துகிறார்கள். நிலத்தில் குழிகள் தோண்டி விதைப்பார்கள். பின் முளை தோன்றி வளர்வதற்கான விருப்பத்தை ஆடியும் பாடியும் வெளியிடுவார்கள். ஆடிப் பாடினால் தான் விதை முளைத்துப் பயிராகி, அறுவடை கிடைக்கும் என நம்புகிறார்கள்.
தாம் விரும்பும் ஒரு எதிர்கால நிகழ்ச்சியைத் தோற்றுவிக்க மந்திரமயமான ஒரு கனவை இவர்கள் நடிக்கிறார்கள். ஆடல் பாடலுக்கும் விதை முளைக்கிற இயற்கை நிகழ்ச்சிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. விதை முளைப்பது, வளர்வது, தானியமாக அறுவடை செய்வது ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் இவர்களுடைய செயல்களுக்கும் எவ்விதக் காரண காரியத் தொடர்பும் இல்லை. ஆனால் ஆடல்பாடல்கள் விதை முளைத்

1 George Thomson, Marxism and Poetry, pp. 7-8.