பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

71


கேட்டு விழித்துக்கொள்ளுகிறான். பழைய அறை, பழைய கிழிந்த பாய்; பழைய கவலைகள். குறிக்கோள் உலகத்தை, தனக்கு விருப்பமான உலகத்தைக் கனவில் கண்டு மீண்டும் பழைய துன்பச்சூழலுடைய புறவுலகிற்கே திரும்பிவிடுகிறான்.
கனவு, நிலையற்றதுதான். புறவாழ்க்கையைக் கனவு மாற்றாதுதான். ஆனால் புறவாழ்க்கையோடு முரண்பட்டு நிற்கிற கனவுலகின் அனுபவம், நனவுலக வாழ்க்கையை மாற்றுவதற்கு உள்ளத்திற்கு உந்துவிசையாகப் பயன்படுகிறது. புறவுலகைக் கனவுலகச் சாயலில், துன்பமில்லாத, அற்பத்தனமில்லாத, இன்பமான, சால்புமிக்க வாழ்க்கையாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கிறது. இவ்வுலகத்தை நேரடியாக மாற்றுவதற்குக் கனவும் கற்பனையும் பயன்படாவிட்டாலும், அவை: தனிமனிதனது செயல்பாட்டை ஊக்குவிக்கக்கூடும். இவ்வுலகின் தீமைகளுக்கு மாறுபாடான கனவுலகம், இவ்வுலகில் தீமை களை எதிர்த்துப் போராடவும் கனவுலகை இங்கு அமைக்க வழி தேடும் முயற்சிக்கும் ஊக்கமளிக்கும்.

இனியொரு விதிசெய்வோம், அதை
எந்த நாளும் காப்போம்

என்ற மனவுறுதியை உண்டாக்கும். நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் பாரதி விடுதலைப் பள்ளு பாடினார். அப்போது அது ஒரு கனவுதான்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று

ஓர் அரை நூற்றாண்டுக்குப் பின் வரப்போகும் சுதந்திரத்தை அது எப்படியிருக்கும் என்று தெரியாமலே, தமது விருப்பத்தை வெளியிட்டார். ஆனந்த சுதந்திரமாக அது இருக்கவேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலைதான் ஆனந்த சுதந்திரம், இது வருங்காலம் பற்றிய விருப்பத்தின் வெளியீடு. இது கனவு மயமானது. இப்பாடலின் தாக்கம் தமிழர் சமுதாயத்தை விடுதலைப் போராட்டத்தில் வீரத்தோடு ஈடுபடவைத்தது. வருங்கால சுதந்திரத்தின் தன்மை எப்படியிருக்கவேண்டும் என்ற பாரதியின் கனவு, பாரத மக்களின் கனவாக உரம் பெற்று வளர்ந்து, அதற்காகவே போராடும் படைகளை உருவாக்கியது. பாரதி கண்ட கனவை (fantasy),பாரதி உருவாக்கிய கவிதை உலகை, புறவுலக மாற்றமாக்க இந்திய மக்கள் போராடுகின்றார்கள்.