பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

நா.வானமாமலை


புறவுலகு பற்றிய கவிஞன் நோக்கு மட்டுமில்லாமல், அவரது பாடலைக் கேட்கும் மக்களின் நோக்கும் மாறுகிறது. கனவுலகு பரவுகிறது. புறவுலகை மாற்றும் ஆர்வமும் உறுதியும் வளருகிறது.
கனவிலும் கற்பனையிலும் பிறக்கும் கவிதையுலகம், புறவுலகை மாற்றும் சக்தியை, கவிதையுலகில் நுழைந்து புறவுலகிற்குத் திரும்பும் மக்களுக்கு அளிக்கிறது.

இசையும் உழைப்பும்

உடலிசைவும் சொல்லிசைவும்

பண்டைய மனிதன் தனது விருப்பங்களையும் உணர்ச்சிகளையும் சைகைகள் மூலமாகவும் பேச்சின் மூலமும் வெளிப்படுத்தினான். பேச்சைவிடச் சைகைகளை அதிகமாகப் பயன்படுத்தினான். இன்றுகூட நாகரிகமடையாத மக்கள் பேச்சை விட அதிகமாகச் சைகைகளைப் பயன்படுத்துகிறார்கள். நாகரிகமடைந்த மக்கள் கை கால்களை அதிகமாக ஆட்டிப் பேசுவதில்லை.
ஒரு குழந்தை எழுதப் படிக்கிறது. இச்செயலில் கைக்கும் மூளைக்கும்தான் தொடர்பு இருக்கவேண்டும். ஆனால் குழந்தை நாக்கைத் துறுத்துகிறது. கைகளை ஆட்டுகிறது. இச் செயல்களைச் செய்துகொண்டே எழுதுகிறது. எழுதும்போதே எழுத்துக்களை உச்சரிக்கிறது. அவசியமில்லாமல் உறுப்புக்களைச் செயல்படுத்துகிறது. இது ஏன்?
குழந்தை எழுதப் படிப்பதற்கு முன் பேசப் படிக்கிறது. அப்போது நாக்குக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் எழுதப் படிக்கிறது. அப்போது கைக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இத்தொடர்புகள் மூளையோடு உறுப்புகளைத் தொடர்புபடுத்தும் நரம்புகளின் மூலம் நிகழ்த் தப்படுகின்றன. எழுதப் படிக்கும்போது முதலில் ஏற்படுத்திக் கொண்ட நாக்கு-மூளைத் தொடர்பை முற்றிலும் துண்டித்துவிட முடியவில்லை. எழுத்தைப் படிப்பதில் முன்னேறுகிற போது தாக்கைத் துறுத்துவது, கையை ஆட்டுவது, தலையை ஆட்டுவது போன்ற அவசியமற்ற உடல் அசைவுகள் மறைந்து விடுகின்றன.
முதலில் ஏற்படும் நரம்பு இணைப்புகள் பின்னர் தேவையான இணைப்புகளுக்கு இடங்கொடுத்துவிடுகின்றன. தேவையற்றவை மறைந்துவிடுகின்றன.