பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 25 —

எருமையின் எழிற் சித்திரம்

வளம் கொழிக்கும் வயல் வெளியில் காணும் சேற்றிலேயே கிடக்கும் எருமையொன்று அதனை விரும்பாது ஊரார் உறங்கும் வேளையில் தன்னைப் பிணித்திருந்த கட்டினை அறுத்தெறிந்துவிட்டு அரச நடைபோட்டுப் புறப்படுகின்றது. வழியில் இருந்த கூரிய முள்ளால் ஆகிய வேலியைத் தன் கொம்புகளால் அகற்றிவிட்டுப் பழனத்துள்ளே சென்று அங்கு மலர்ந்து விளங்கும் தாமரையைத் தின்று மகிழ்கின்றது. இக் கண்கொள்ளாக் காட்சியினை விளக்கும் பின்வரும் பாடல் அகநானூற்றிலே காணப் பெறுகின்றது.

”சேற்றுநிலை முனை இய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரும்.” (அகம். 46)

இதேபோன்று எருமையைப்பற்றிய பிறிதொரு ஓவியம் அகநானுாற்றிலே காணப்படுகின்றது. இரவு முழுதும் சேற்றிலேயே மூழ்கிக் கிடந்த எருமையொன்று காலையில் கதிரவனைக் கண்டதும், சேற்றினின்று எழுந்து, சேற்றிலே வாழும் மீன்கள் சிதையும்படி மிதித்துக் கடுநடை போட்டு எங்கோ புறப்படுகின்றது. அதன் கொம்பிலே பகன்றைக் கொடியொன்று சிக்கிப் பிணைந்து விளங்குகின்றது. கொடியில் காணும் மலர்கள் வெள்ளைவெளே ரென்று காட்சி தருகின்றன. இவ்வாறு வரும் எருமையானது போருக்குப் புறப்பட்டுச் செல்லும் புது வீரன் போன்று காணுகின்றது என்று ஆசிரியர் கூறியிருப்பது நமக்கு ஓர் நல்விருந்தாகும்.