பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

இலக்கியத் தூதர்கள்

செய்தியைக் கூறியது. ‘அரசே! நின் தோளுக் கிசைந்த தோகை நல்லாளாகத் தமயந்தி என்னும் தையலாள் ஒருத்தி யுள்ளாள்’ என்று உரைத்தது. அவள் பண்பு நலத்தை யெல்லாம் அன்பொழுகச் சொல்லியது. அவள் பெண்மை யென்னும் நாட்டைப் பேணி யரசாண்ட திறம், புலவரால் நயம்பட உரைக்கப் படுகின்றது. நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களையும், தமயந்தி தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நாற்படைகளாகக் கொண்டாள்; ஐம்பொறிகளையும் அரிய அமைச்சர்களாகக் கொண்டாள் ; கால்களில் அணிந்துள்ள சிலம்புகளைக் கடிமுரசாகக் கொண்டாள்; கண்கள் இரண்டையும் வேலும் வாளுமாகக் கொண்டாள்; முகமாகிய மதியினைக் கொற்றக் குடையாகப் பெற்றாள்; இவ்வாறு அவள் பெண்மை யரசைப் பேணி யொழுகினாள் என்று அன்னத்தின் வாயிலாகப் புலவர், தமயந்தியின் நலமுரைக்கும் திறம் பாராட்டற் குரியதாகும்.

அன்னம் தூது போதல்

தமயந்தியின் சிறப்பைக் குறித்து அன்னம் சொன்ன அரிய செய்திகளைக் கேட்ட நளன் அவள் மீது அளவிலாப் பெருங்காதல் கொண்டான். அதனால் அவனது நெஞ்சம் இற்றது; மானம் அற்றது; நாணம் அழிந்தது. ‘இனி என் வாழ்வு, உன் வாய்ச்சொற்களில்தான் உள்ளது’ என்று கூறி, அன்னத்தை அத் தமயந்தியின்பால் தூது போக்கினான். அங்கு நின்று அன்னம் வானில் எழுந்து விதர்ப்ப நாட்டின் தலைநகரமாகிய குண்டினபுரத்தை நோக்கி விரைந்து பறக்கலுற்றது. அதனைத் தூதனுப்பிய நளன் உள்ளம்,