பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

இலக்கியத் தூதர்கள்

இறைவன் திருவிளையாடல்

பரவையாரின் மறுப்புரை கேட்ட பரமன் தமது உண்மைக் கோலத்தைக் காட்டாமல் உளத்துள் நகைத்து அவ்விடத்தை விட்டு அகன்றார். தோழரின் காதல் வேட்கையைக் காணும் விருப்பினராய் விரைந்து வெளிப்போந்தார். தம்பிரானைத் தூதனுப்பிய நம்பியாரூரரோ அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார். “நான் அறிவில்லாமல் இறைவனைப் பரவைபால் புலவி நீக்கத் தூது விடுத்தேனே” என்று எண்ணிப் புலம்பினார். ‘அப்புண் ணியர் அவள் மனையில் நண்ணி என் செய்தாரோ? பெருமானே என்பொருட்டுத் தூது வந்திருப்பதைக் கண்டால் அப்பேதைதான் மறுப்பாளோ? அவளது ஊடலை ஒழித்தாலன்றி அவர் மீளார்’ என்று தம்முட் பேசித் தூதரை எதிர்கொள்ள எழுந்து வெளியே செல்வார். அவரது வரவைக் காணாது அயர்வுடன் மயங்கி நிற்பார். கண்ணுதற் பெருமான் காலந் தாழ்த்தனரே என்று கவல்வார்.

தூதர் ஓதிய செய்தி

தூது சென்ற இறைவன் துன்னும் பொழுதில் சுந்தரர் அணைகடந்த வெள்ளம் போல் ஆர்வம் பொங்குற எழுந்து சென்று அவரை எதிர்கொண்டு தொழுதார். பெருமான் திருவிளையாட்டை அறியாத தோழர், “முன்னாளில் என்னை நீர் ஆட்கொண்டதற்கு ஏற்பவே இன்று அருள் செய்தீர்” என்று மகிழ்வொடு புகன்றார்.அதுகேட்டுப் புன்முறுவல்கொண்ட புரிசடைப் பெம்மான், “நின் விருப்பின் வண்ணம் நங்கைபால் நண்ணி நாம் எத்தனை சொல்லியும் ஏற்காமல் வன்சொல்லே வழங்கி மறுத்தாள்” என்றார்.