பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

இலக்கியத் தூதர்கள்

அவனோடு எதிர்த்துப் போரிட்டு வெல்லுவோம் என்று எண்ணன்மின்! உங்கள் நாடும் நகரும் உங்களுக்கே உரியனவாக இருக்க விரும்பின், அவன் வேண்டும் திறை கொடுத்து உய்ம்மின்! மறுப்பின் அவன் விடான். நான் கூறும் இந் நல்லுரைகளைக் கேட்டு நடவா தொழிவீராயின் நீவிர் நுந்தம் உரிமை மகளிரைப் பிரிந்து உயர்ந்தோர் உலகம் புகுவது உறுதி.

அதியமானுக்கு அறிவுரை

இவ்வாறு அதியமானின் பகைவர்பால் அமைதி விளைக்கும் தூதராய்ச் சென்று அறிவுரை கூறிவந்த ஒளவையார், அவ்வதியமானுக்கும் அறிவுரை கூறத் தவறினரல்லர். “அரும்போர் வல்ல அதியமானே! வலிமிக்க புலியொன்று சீறியெழுந்தால் அதனை எதிர்த்துத் தாக்கவல்ல மான் கூட்டமும் இம் மா நிலத்தில் உண்டோ? வானில் செங்கதிரோன் வெங்கதிர் பரப்பியெழுந்த பின்னர் இருள் நீங்காது நிற்பதுண்டோ? பாரும் அச்சும் ஒன்றோடொன்று உராயுமாறு மிக்க பாரத்தை யேற்றிய வண்டி மணலில் ஆழப்புதைந்த வழியும் அப்பாரம் கண்டு கலங்காது, மணல் பரக்கவும் கல் பிளக்கவும் செல்ல வல்ல எருதிற்குப் போதற்கரிய வழியிதுவென்று கூறத்தக்க வழியும் உளதோ? இவை போன்றே நீ போர்க்களம் நோக்கிப் புறப்படின் நின்னை எதிர்க்க வல்ல வீரரும் உளரோ?” என்று அதியமானுக்கும் அறிவுரை கூறி, அவனது போர் வேட்கையைத் தணிக்க முயல்வார்.

ஒளவையாரின் துணிவும் நாட்டமும்

ஒளவையார் கூறும் அறிவுரைகள் சில சமயங்களில் அதியமான் செவியில் ஏறுவதில்லை. ‘பகைவரை