பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

இலக்கியத் தூதர்கள்

என்னும் பெருமை உலகிலேயே முதன்முதல் தமிழகத்திற்கும் தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையாருக்குமே வாய்த்தது.

அரசியல் தூதர் ஒளவையார்

தலையாய தூதருக்கு அமையவேண்டிய நிலையாய பண்புகளெல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற ஒளவையார் அதியமான் தூதராகக் காஞ்சிமாநகரம் புகுந்தார். அவர் தூதராக வந்தாலும் அருந்தமிழ்ப்புலமை சான்ற பெருமாட்டியார் என்பதை நன்குணர்ந்த தொண்டைமான் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அவர் தன்பால் வந்துள்ளதன் நோக்கத் தையும் குறிப்பால் உணர்ந்துகொண்டான். அதியமானினும் மிகுதியான படைவலியுடையோம் என்பதை அவருக்கு அறிவுறுத்தி விட்டால் அவர் ஒன்றுமே பேசாது சென்றுவிடுவார் என்று எண்ணினான். அவன் தனது எண்ணத்தை வாயாற் கூற விரும்பவில்லை. அவருக்குத் தன் அரண்மனை முற்றும் சுற்றிக் காட்டுவானைப்போல அவரை அழைத்துச் சென்று பல இடங்களையும் காட்டினான். படைக்கலங்களைத் திருத்தி அணிசெய்து வைத்திருக்கும் தன் படைக்கலச் சாலைக்குள்ளும் அவரை அழைத்துச் சென்றான். ஆங்கே அணியணியாக அடுக்கி வைத்திருக்கும் படைக்கலம் அனைத்தையும் பார்க்குமாறு செய்தான்.

ஒளவையாரின் பழிப்பும் பாராட்டும்

தொண்டைமான் உள்ளக்குறிப்பைத் தெள்ளிதின் உணர்ந்து கொண்டார் ஒளவையார். தொண்டைமானே தூது வந்த மூதாட்டியாருக்குத் தக்க அறி வூட்டினோம் என்ற பெருமித உணர்ச்சியுடன் நின்றான்.