பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

இலக்கியத் தூதர்கள்

கிறான். இந்நாளில் மாலைப்பொழுதில் தோன்றும் மதியாகிய செல்வனும் நேர்மையாளன் அல்லன். கூடினோர் இடையே ஊடினாலும், பிரிந்தவர் துணைகளை மறந்தாலும் மாரன் மணமுள்ள மலர்க்கணையால் அவர் உயிரைக் கொள்ளை கொள்ளுவான். இஃது அவனுக்கு இயல்பேயன்றிப் புதிய செயலன்று. இதனை நீர் அறிந்தருள வேண்டும்.

வசந்தமாலை தூது

இவ்வாறு அறுபத்துநான்கு கலைகளும் இசைக் தொழுக, இசையைப் பழித்த இனிய மொழியில் விளைந்த மழலையாற் பலகாற் சொல்லிச் சொல்லி, மாதவி தன் காதற் பனுவலை எழுதினாள் பிரிவுத் துயரால் பசந்த மேனியொடு வசந்தமாலையை அழைத்தாள். அவளிடம் மாலையைக் கொடுத்து, “இம் மலர் மாலையிற் பொதிந்த பொருளையெல்லாம் கோவலனுக்கு எடுத்துரைத்து அழைத்து வருக” என்று பணித்தாள்.

கோவலன் மறுப்பு

மாலையைப் பெற்ற வசந்தமாலை கூலமறுகில் கோவலனைக் கண்டு அதனைக் கொடுத்தாள். அவன், ‘நாடக மகளாதலின் பல வகையாலும் நடித்தல் அவட்கு இயல்பு’ என்று வெறுப்புடன் கூறி அதனை வாங்க மறுத்தான். அதனால் வாடி வருந்திய வசந்தமாலை, மாதவியிடம் சென்று செய்தியை ஓதினாள். அது கேட்ட மாதவி, ‘இன்று மாலை வாராமற் போயினும் நாளைக் காலையில் வரக் காண்போம்’ என்று தளர்ந்த மனத்தோடு மலர்ப்படுக்கையிற் பொருந்தாது வருந்தினாள்.