பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

இலக்கியத் தூதர்கள்

இலங்கையின் எழிலைக் காண்டல்

அனுமன் பவள மலையின்மேல் நின்றபடியே இலங்கை மாநகரை உற்று நோக்கினான். இராவணன் வாழும் இலங்கை மூதூருக்கு வானுலகும் ஈடாகாது என்று எண்ணினான். வேண்டிய வேண்டியாங்கெய்தி வெறுப்பின்றித் துய்க்கும் சிறப்புடைய துறக்கம் இது தானோ என்று வியந்து போற்றினான். எழுநூறு யோசனைப் பரப்புடைய இந்நகரின் எண்ணற்ற காட்சிகளை முழுவதும் காண்டல் அருமை என்று எண்ணினான். நகர் வாயிலைக் கடந்து நகருட் புகுதற்கு விரைந்தான். அந்த வாயிலை அரக்கர்கள் பலர் பலவகைப் படைக்கலங்களுடன் பாதுகாத்து நிற்பதைப் பார்த்தான். இவ்வாயிலிற் புகுந்து செல்வதாயின் அரக்கர்களுடன் போர்புரிய நேரிடும்; ஆதலின் வேறு வழியாகச் செல்லுதலே நேரிது என்று நினைந்து வேறு பக்கமாக விரைந்தான். அந்நகரைக் காத்துநின்ற இலங்கா தேவியை வென்று நகரினுட் சென்றான். இராமபிரான மனத்துள் நினைத்து வணங்கியவாறே இலங்கைமாநகர் வீதிகளில் ஓரமாக கடந்து சென்றான். மலர்களில் தேனைநாடிச் செல்லும் வண்டைப்போல் கண்ட இடமெல்லாம் சீதையைத் தேடிக்கொண்டே சென்றான்

அனுமன் சீதையைத் தேடிக் காண்டல்

அங்குள்ள பொழில்களிலும் தேடிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அனுமன் அங்கிருந்த அசோகவனத்தை யடைந்தான். அப் பொழிலின் பல இடங்களிலும் தேடிய அவன் அரக்கியர் நடுவில் சீதை வாடிய தோற்றத்துடன் வருந்தியிருத்தலைக் கண்டான். இராமனைப் பிரிந்த துயரத்தாலும்