பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமன் விடுத்த தூதன்

65

திருமாலே; இப்பிராட்டி செந்தாமரை மலரில் தங்கியிருக்கும் திருமகளே ஆவள்” என்று அனுமன் மரத்தின் மறைவில் தங்கிப் பலவாறு எண்ணிக் கொண்டிருந்தான்.

புலியைக் கண்ட மான்

இவ்வேளையில் இராவணன் சீதை இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டு வந்தான். அவனைக் கண்ட சீதாபிராட்டி சிந்தை கலங்கிக் கூற்றுவனைக் கண்ட உயிர் போல நடுநடுங்கினாள். தன்னைத் தின்னுதற்கு வரும் கடும்புலியைக் கண்டு அஞ்சி நடுங்கும் இளம்பெண் மான் போன்று அஞ்சியொடுங்கினாள். அவள் ஏக்கத்தையும் இராவணன் ஊக்கத்தையும் அனுமன் நோக்கி அளவிலாச் சினங் கொண்டான். இராவணன் சீதையைப் பலவாறு புகழ்ந்துரைத்து முடிமீது குவித்த கையினனாய்ப் படிமீது வீழ்ந்து பணிந்தான். அவன் கூறிய சொற்கள் சீதையின் காதுகளில் காராசம் போல் நுழைந்தன. அவள் இருவிழிகளிலும் குருதி ஒழுகியது. அவள் தன் உயிரையும் பொருட் படுத்தாமல் இராவணனைச் சிறு துரும்பினும் கீழானவனாக எண்ணிப் பலவாறு இகழ்ந்துரைத்தாள். அவள் கூறிய மொழிகளைக் கேட்ட இராவணனுக்குப் பெருஞ் சினம் எழுந்தது. அவனுடைய இருபது விழிகளிலுமிருந்து தீப்பொறிகள் பறந்தன. அவன் தன் பத்து வாய்களாலும் அதட்டி ஆரவாரம் செய்தான். அஞ்சாமல் நமக்கொரு பெண் அறிவுரை கூறுவதோ என்று எண்ணினன். அதனால் நாணமும் சினமும் மிகுந்த அவன் ‘இவளைப் பிளந்து தின்பேன்’ என்று எழுந்தான். ஆனால் அச் சீதைமீது அவன் கொண்ட காதலே அச்சிற்றத்தை மாற்றிவிட்டது.