பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

இலக்கியத் தூதர்கள்

“வீரனே ! நீ யாவன் ? ” என்று அனுமனை வினாவினாள்.

“அரக்கனே யாக, வேறோர்
அமரனே யாக, அன்றிக்
குரக்கினத் தலைவ னேதான்
ஆகுக, கொடுமை யாக
இரக்கமே யாக வந்திங்
கெம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வைத் தந்தான்
உயிரிதின் உதவி யுண்டோ ?”

ஆழி கண்ட சீதை அனுமனை வாழ்த்துதல்

இவ்வாறு உள்ளந் தேறி, ‘வீர ! நீ யாவன்?’ என்று வினவிய சீதைக்கு அனுமன் தன்வரலாற்றைக் கூறி வணங்கினான். அவன் எடுத்துரைத்த இராமபிரான் எழில் நலத்தைக் கேட்டு அவள் இதயம் உருகினாள். இராமபிரான் கூறியனவாக அனுமன் கூறிய அடையாள மொழிகளையும் கேட்டு உள்ளம் உருகினாள். பின்னர், இராமபிரான் அளித்த கணையாழி யொன்றை எடுத்துப் பிராட்டிக்குக் காட்டினான். அதனைக் கண்ட சீதை பெருமகிழ்ச்சி கொண்டாள். அதனை அன்புடன் வாங்கித் தன் மார்பில் வைத்துத் தழுவிக் கொண்டாள் ; தலைமேல் தாங்கினாள்; கண்களில் ஒத்திக் கொண்டாள்; அதனைக் கொண்டுவந்தளித்த அனுமனை வாயார வாழ்த்தினாள். “இராம பிரானின் தூதனாக வந்து எனது உயிரைக் கொடுத்த உனக்கு என்னாற் செய்யக்கூடிய கைம்மாறும் உளதோ ? ஈரேழு உலகங்களும் அழிவடைந்த காலத்திலும் நீ இற்றை நாள் இருப்பது போன்றே எற்றைக்கும் ஒரு தன்மையுடன் வாழ்ந்திருப்பாயாக!” என்று வாழ்த்தினாள்.