பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

இலக்கியத் தூதர்கள்

சுக்கிரீவன் மனைவியை மீட்டுக் கொடுத்தான்; அரசியலையும் அவனுக்கே வழங்கினான்; அவ்வாறு தனக்கு உதவி செய்த இராமபிரானுக்குத் தானும் உதவி செய்ய விரும்பித் தன் படையைத் திசையெல்லாம் அனுப்பிச் சீதாபிராட்டியைத் தேடுமாறு செய்துள்ளான்” என்று அனுமன் கூறினான்.

அனுமன் தூதுச் செய்தி அறிவித்தல்

மேலும், அனுமன் இராவணனை நோக்கி, “நான் சொல்ல வந்த செய்தியைக் கேள்; உனது செல்வ வாழ்வை வீணாக்கிக் கொண்டாய்; அரச தருமத்தைச் சிறிதும் நீ நினைந்தாயல்ல; கொடிய செயலைச் செய்துவிட்டாய்; அதனால் உனக்கு அழிவு நெருங்கியுள்ளது; இனிமேலாயினும் நான் இயம்பும் உறுதியினைக்கேட்டு நடந்தால் உனது உயிரை நெடுங்காலம் காத்துக்கொள்வாய், சீதாபிராட்டியைத் துன்புறுத்திய தீவினையால், தவஞ்செய்து ஈட்டிய நல்வினையை அடியோடு இழந்தாய்; உனது பெருமை முழுவதும் அழிந்துவிட்டது; ‘தீவினை நல்வினையை வெல்லமாட்டாது’ என்னும் பெரியோர் உரையை நீ உளங்கொள்ளாமல் ஒழிந்தாய் ; நேர்மையில்லாத சிற்றின்ப வேட்கையினால் நன்னெறியை மறந்தவர்கள் மேன்மையடைய வியலுமோ ? சிவபிரான் உனக்களித்த வரம் தவறினாலும் இராமபிரானது அம்பு தவறிப் போகமாட்டாது; ஆகையால் உனது செல்வம் அழியாதிருக்கவும், உறவினர்கள் ஒழியாதிருக்கவும் நீ விரும்பினால் கவர்ந்து வந்த சீதையை உடனே விட்டு விடுமாறு சுக்கிரீவன் உன்பால் உரைத்து வரச்சொன்னன்” என்று, தான் தூது வந்த செய்தியினை ஓதி முடித்தான்.