பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமன் விடுத்த தூதன்

73

இராவணன் சினமும் அனுமன் மனமும்

அனுமன் கூறிய செய்திகளை இராவணன் கேட்டான். மலையில் வாழும் குரங்கோ இத்துணை அறிவுரைகளை எடுத்தியம்பியது! என்று கூறிப் பெருநகை புரிந்தான். ‘ஒருவனுடைய தூதனாக இந்நகரம் புகுந்த நீ அழகிய பொழிலை யழித்ததும், அரக்கர்களைக் கொன்றொழித்ததும் ஏன்?’ என்று வினவினான். ‘உன்னைக் காட்டுவோர் எவரும் இன்மையால் அசோக வனத்தை யழித்தேன் என் கருத்தைக்கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் என்னைக் கொல்ல வந்தவர்களை நான் கொன்றொழித்தேன் ; இறுதியில் கட்டுண்டவன் போல் நான் வந்ததும் உன்னைக் காணவே’ என்ருன் அனுமன்.

அனுமன் மகேந்திரம் அடைதல்

அனுமன் மறுமொழி கேட்டுச் சினங்கொண்ட இலங்கைவேந்தன் கட்டளையால் அரக்கர்கள் அவனது வாலில் தீ வைத்தனர். அவன் அத்தீயினால் இலங்கை மாநகரை அழித்து வெளிப்போந்தான். இராமபிரான் திருவடிகளைத் திக்கு நோக்கி இறைஞ்சினான். விண்வழியே பறந்து வந்து இடைவழியில் மைந்நாகமலையில் சிறிது போழ்து தங்கினான். மீண்டும் அங்கிருந்து எழுந்து மகேந்திர மலையிற் குதித்தான். மனக் கவலையுடன் அங்கிருந்த வானர வீரர்கள், அவனது முகக் குறிப்பைப் பார்த்து அகக்களிப்பு அடைந்தனர். அனுமன் அங்கிருந்த அங்கதன் முதலான வானர வீரர்களைக் கண்டு வணங்கினான். அவர்கள் பால் அனுமன் இலங்கை சென்று மீண்டசெய்திகளுள் சிலவற்றை உரைத்தான். அவன் கூறாதவற்றையும் வானர வீரர்கள் குறிப்பினால் உணர்ந்து மகிழ்ந்தனர்.

இ.தூ.-6