பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. பாண்டவர் விடுத்த தூதன்

கம்பரும் வில்லியும்

பாரத நாட்டில் தோன்றிய பழைமையான வடமொழி இதிகாசங்கள் இராமாயணமும் பாரதமும் ஆகும். அவற்றைத் தமிழிற் பாடித்தந்த அருந் தமிழ்க் கவிவாணர் பலர். ஆயினும் இராமாயணத்தைப் பாடிய கம்பரும், பாரதத்தைப் பாடிய வில்லி புத்தூரருமே கற்றோரால் வியந்து போற்றப்படுகின்றனர். இப் பெருங்கவிஞர் இருவரும் அவ் விதிகாசங்களைக் கற்றவர் வியக்கவும் நயக்கவும் நற்றமிழிற் பாடிய பின்னர், முன்னர்த் தமிழில் தோன்றிய இராமாயண பாரத நூல்கள் வழக்காற்றினின்று மங்கி மறையலாயின.

தமிழுக்குக் கவி

நெஞ்சை யள்ளும் செஞ்சொற் காவியமாகிய சிலப்பதிகாரக் காலத்திற்குப் பின், அருந்தமிழிற் பெருங் காவியம் ஆக்கியவர்களில் சிறந்து நிற்போர் கம்பரும் வில்லிபுத்தூரருமே என்று சொல்லலாம். பிற்காலத்தில் தமிழுக்குக் ‘கவி’ என்று சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கார் கம்பரும் வில்லியும் என்று கவியுலகம் கொண்டாடும். இராமாயண பாரத வரலாறுகளைச் செவிக்கினிய செஞ்சொற் பாக்களால் தெவிட்டாத தெள்ளமுதமாக்கித் தந்த இவ்விருவர்க்கும் ஒப்பாவார் பிற்காலத்தில் எவருமிலர். கவிச்சக்கரவர்த்தி என்று கம்பர் சிறப்பிக்கப் பெற்றதுபோல், வில்லிபுத்தூரரும் ‘கவி சார்வ பெளமன்’ என்று சிறப்பிக்கப்பெற்றார். இவர் தம் காலத்தில் பிழையுடைய கவிபாடும் புல்லறிவாளரின் செவிகளைக் குடைந்து தோண்டி, எட்டின மட்டும்