பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

இலக்கியத் தூதர்கள்

கோட்டத்து முருகவேள் ‘திகடசக்கரம்’ என்று அடியெடுத்துக்கொடுக்க, அத்தொடரையே முதலாகக் கொண்டு நூலைப் பாடினர். சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு நெருப்புப் பொறிகளே ஆறுமுகப்பெருமானாக வடிவெடுத்தனவாதலின், அப்பெருமானின் வரலாற்றைக் கூறும் கந்த புராணமும் சிவபெருமானது நெற்றிக் கண்ணுக்கு நேரானதெனப் பாராட்டப்பெறும்.

கச்சியப்பர் இருமொழிப் புலமை

காஞ்சிக் குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ள முருகவேளை முப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் தொழும்பு பூண்டவராகிய கச்சியப்பர் வடமொழிப் புலவரும் தென்மொழிப் புலவரும் ஒருங்கே கொண்டாட இருமொழிப்புலமையும் சான்ற பெருங்கவிஞராக விளங்கினார். இத்தகைய வித்தகரைக் காஞ்சியில் வாழ்ந்து வந்த கற்றோர் பலரும் முருகன் வரலாற்றை இனிய தமிழில் பாடித்தருமாறு பலகால் வேண்டினர். முருகப்பெருமானும் ஒருநாள் இரவு, அவரது கனவில் தோன்றி, “அன்பனே! நமது புராணத்தை நற்றமிழிற் பாடித் தருக” என்று கட்டளையிட்டருளி ‘திகட சக்கரம்’ என்று முதலும் எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தருளினான்.

முருகன் திருத்திய முழுநூல்

அக் கட்டளையைச் சிரமேற் கொண்டு கச்சியப்பர் கந்தபுராண நூலைப் பாடத் தொடங்கினார். நாள் தோறும் தாம் பாடிய பாடல்களை யெழுதிய ஓலைச் சுவடிகளே நள்ளிருட் பூசனை முடிவுற்றதும் முருகப் பெருமான் திருவடியில் வைத்துத் திருக்கதவத்தை