பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

போற்றி, அதற்குத் துணை செய்ய வல்ல உவமை, உருவகம் போலும் உயர்ந்த அணிகள் ஒரு சிலவே கொண்டு சிறந்து விளங்கிய தன் பண்டைப் பெருமையினை அக்காலத் தமிழகம் இழந்து விட்டது. வடமொழி மரபினைப் பின்பற்றிப் பொருள் நயத்தைப் போற்றாது, வெறும் சொல் பயம் ஒன்றையே கருதி எழுந்து எண்ணற்ற அணிகளை மேற்கொண்ட வண்ணப் பாடன்களைக் கொண்டு வனப்பிழந்து விட்டது.

சமய வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பல்லவர்களும், சோழர்களும், பாண்டியர்களும், தாங்கள் வழிபட்ட கடவுளர்க்குத் தமிழ்நாட்டின் ஊர்கள் தோறும் பெரும் பெருங் கோயில்களைக் கட்டித் தங்கள் சமய நெறிகளை வளர்த்து மகிழ்ந்தனர். அம்மட்டோ! அவ்வரசர்கள் காலத்தே தோன்றிய அடியார்களும் அவ்வாறு எழுந்த கோயில்கள் தோறும் சென்று சென்று, பாக்கள் பல பாடிப் பரவி வாழ்ந்தனர். இவ்வாறு பாடல் பெற்றுக் கோயில் கொண்டிருக்கும் கடவுளரைப் புராணம் பாடிப் பரவ வேண்டும் என்ற வேட்கை எழுந்தது. அம்மக்களின் அன்பை எதிர் நோக்கி வாழ்ந்த அக்காலப் புலவர்கள், அவர் தம் வேட்கையினை நிறைவேற்ற முன் வந்தனர். அதன் விளைவால், ஊரின் பெருமை, அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் கடவுளின் பெருமை உரைக்கும் புராணங்கள் பல தோன்றலாயின. அவ்வாறு பாடப் பெற்ற புராணங்கள் பலவே ஆயினும், அப்புராணங்கள் கூறும் பாட்டுடைத் தலைவனும், பாட்டு எடுத்துக் கொண்ட பொருளும், சிவனும், அவன் பெருமையும் என்ற