பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. நாடக இலக்கியங்கள்

இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற அம்முப்பெரும் பிரிவினைத் தமிழ், பன்னெடுங் காலத்திற்கு முன்னரே பெற்றுவிட்டது. மக்கள் பண்பாட்டினை வளர்ப்பதே இலக்கிய ஆசிரியர்களின் குறிக்கோளாம் என்பதை முன்னரே கூறினோம். உயரிய இலக்கியங்களைக் கற்கும் தகுதிப் பாட்டினை, உலகில் உள்ளார் அனைவரும் பெற்று விட்டனரல்லர்; கற்றார் சிலராகவும், கல்லாதார் பலராகவும் இயல்வதே இவ்வுலகியல். அக்கல்லாத பலரைப் பண்பாடுடைய பெரியராக்க, இயல் தமிழ் இலக்கியங்களால் இயலாது என்பதை அறிந்த இலக்கியப் பேராசிரியர்கள், அப்பயனைத் தரவல்ல துணையாகத் தேடிப் பெற்றதே நாடக இலக்கியம். கற்கும் வாய்ப்பு வாய்க்கப் பெறாதாரை நன்னெறிக்கண் செலுத்த மேற்கொண்ட நாடகத்தமிழ், அக்கல்லா மக்கள் கண்டும் கேட்டும் மகிழும் காட்சிகளையும், இலக்கிய நயம் செறிந்த உரையாடல்களையும், இனிய ஓசை அமைந்த இசைப்பாடல்களையும் பெற்றுப் பிறந்தது. இயல் தமிழும் இசைத் தமிழும் கூடப் பிறதம் நாடகத் தமிழ், அவற்றிற்குரிய கேள்வி இன்பத்தோடு, அவற்றிற்கில்லாக் காட்சி இன்பத்தையும் பெற்று. அவை இரண்டினும் சிறந்து விளங்கிற்று.