உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

ஆங்காங்கே காணும் உயர்ந்த பண்பாடுகளையெல்லாம் ஓரிடத்தே கொணர்ந்து காட்டுவர். அவர் ஆசையெல்லாம், எல்லோரும் இன்புற்றிருத்தல் வேண்டும். அதற்கு வழி எல்லோரும் நல்லோராதல் வேண்டும் என்பதே. அதனால், அவர்கள் நல்லனவும் தீயனவும் கலந்து காணும் உலக நிலையை உள்ளவாறே எடுத்துக் கூறாது, அவற்றுள் நல்லனவற்றை மட்டும் தொகுத்து, உலக நிலை இவ்வாறு இருத்தல் வேண்டும் எனக் காட்டியுள்ளனர்.

எவ்வழி நோக்கினும் நல்லோராய் வாழ்தல் உலகில் இயலாது. இயலாது ஆயினும், அவ்வாறு இயலுவதே நன்று. ஆதலின், எல்லா வகையாலும் நல்லோராய் வாழ்ந்தார் இலராகவும், அவ்வாறு வாழ்ந்தார் ஒருவர் உளராகக் கொண்டு, புலவர்கள் பாடியுள்ளனர். தமிழில், அகத்திணை இலக்கியங்கட்குரிய தலைவரைத் தேர்ந்தெடுத்த ஆசிரியர்கள், ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவனையும், ஒருத்தியையுமே கொண்டுள்ளனர். அகத்திணை இலக்கியத்தின் இயல்பு கூறவந்த உரையாசிரியர், “சுவைபட வருவனவெல்லாம் ஒரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல், அஃதாவது, செல்வத்தானும், குலத்தானும், ஒழுக்கத்தானும், அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி, இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக்