பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9

ஆசாபாசங்களுக்கு ஆக்கம் தருவனபால் பேரன்பு காட்டும் அவர்கள், அவற்றிற்கு ஆக்கம் தாராதனபால் வெறுப்பே கொள்வர். அதனால், முன்னவற்றைப் போற்றுவதும், பின்னவற்றைப் புறக்கணிப்பதும் செய்வர். இந்தப் பண்பு எக்கால மக்களுக்கும் எந்நாட்டு மக்களுக்கும் ஏற்புடைய பண்பாம்.

இவ்வாறு தங்கள் ஆசாபாசங்களுக்கு ஆக்கம் அளிப்பனபால் விருப்பும், அது தாராதனவற்றின்பால் வெறுப்பும் கொள்வது மக்கள் அனைவர்க்கும் ஒத்ததேயாயினும், அவர்களுக்கு ஆசாபாசம் அளிக்கும் அப்பொருள்கள், எக்காலத்தும் ஒத்த இயல்புடையன ஆகா. ஒரு காலத்தே வாழ்ந்த மக்களுக்கு விருப்பம் உடையவாய் விளங்கிய ஒரு பொருள், பிறிதொரு காலத்தே வாழ்ந்த மக்களுக்கு விருப்பம் தருவதில்லை. ஒரு காலத்தே விரும்பி மேற்கொள்ளப்பட்ட ஒன்று, பிறிதொரு காலத்தே வெறுக்கப்பெறும். ஒரு காலத்தே வெறுத்து ஒதுக்கப்பெறும் ஒன்று, பிறிதொரு காலத்தே விரும்பித் தழுவப்பெறும். ஒரு காலத்தில் வாழும் மக்களுள்ளும், ஒரு சிலர்க்கு விருப்பம் தரும் பொருள் ஏனேயோர்க்கு விருப்பம் தருவதில்லை. ஒருவர் விரும்புவதை மற்றொருவர் வெறுப்பர் ஒருவர் வெறுப்பதை மற்றொருவர் விரும்புவர். மக்களின் இயல்பு இது.

மக்கள் காட்டும் விருப்பு வெறுப்பிற்கேற்பவே, ஒரு பொருள் வாழ்தலும், மறைதலும் நிகழும். இந்த இயல்பு இலக்கியங்களுக்கு மட்டும் விலக்காகாது. ஆனாலும், ஒரு சில இலக்கியங்கள், இத்தகைய உலகைத் தாண்டிப் பல்