பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19

கொண்டு பெறலாம் என்ற அறிவினைப் பெற எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கும். நெருப்பையும், நெருப்பின் பயனையும் நினைத்தபோதே அறிந்து விடவில்லை அவ்வறிவு விளங்க ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்திருக்கும். உப்பைக் கண்டு, அதன் உறுசுவை அறிந்தது, எளிதில் எவ்வித முயற்சியுமில்லால் ஆகிவிடவில்லை. மரத்தின் கிளைகளையும் தழைகளையும் கொண்டு, மண் குடிசை அமைக்கும் அறிவினை எளிதில் பெற்றுவிடவில்லை. வண்டியைப் பாரம் அறியாது ஈர்த்துச் செல்லச் சக்கரம் உதவும் என்ற உணர்வினை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து உணர்ந்தனரோ அறியோம். கடலையும் கடல்போலும் பெரு நீர் நிலைகளையும், கட்டைகளின் துணை கொண்டு கடக்கலாம் என்பதைக் கணப் பொழுதில் கண்டுபிடித்து விடவில்லை. சுருங்கச் சொல்லின், இன்று ஒரு திங்களில் காணும் வளர்ச்சி, அன்று ஓராயிரம் ஆண்டு வளர்ச்சிக்கு இணையாம்.

இந்த உண்மையை உள்ளத்தில் வைத்து, மொழி தோன்றிய காலத்தையும், அது வளர்ந்த வகைகளையும் மதிப்பிடல் வேண்டும். பொருளின்றி ஒலித்த ஒலிகளுக்குப் பொருளைக் கற்பித்து ஒலித்த காலம் ஒரு காலம்: அவ்வாறு பொருளோடு ஒலித்த ஒலிகளே, ஒன்றும் பலவுமாய்க் கூட்டிச் சொல்லாக்கிய காலம் ஒரு காலம்: அச்சொற்களே ஒன்றும் பலவுமாய் இணைத்துத் தொடராக்கி வழங்கிய காலம் ஒரு காலம்; ஒலிகளே ஒலிக்குங் கால், இன்ன ஒலி, இன்ன ஒலியை அடுத்து ஒலிப்பது அரிது என அறிந்து அவ்வாறே, அவ்வொலிகளை இணைத்தும், மாற்றியும், இடத்திற்கேற்பத் திருத்தியும் ஒலித்த