பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

மாறுபட்டுச் செய்யும் போராட்டத்திற்கு நிலைக்களமாய் அமைந்த தன் உடலும், யானைகளால் ஈர்ப்புண்டு, அழிந்துபோன கயிறேபோல் அழிந்து விடுமோ என அஞ்சினான். அஃது ஏற்கெனவே அழியத் தொடங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகளும் தோன்றின. செயலற்று மயங்கி மாறாத்துயர்கொண்டு வருந்தினான்.

ஆசையால் நிறைந்து, அஃதுடைமையால் உயர் நிலைக்குச் செல்வது உலகம். ஆசை அற்றவர் உயர் நிலை பெறுதல் இயலாது. ஆகவே, ஆசையை அறவே கைவிடுதல் கூடாது. ஆனால் அந்த ஆசை அளவோடு அமைதல் வேண்டும். நல்லனவற்றின்பால் செல்லுதல் வேண்டும். அது அந்த வரையறைக்குள் இருக்கும் வரை நன்று; ஆனால், அது அளவிற்கு மீறிச் செல்லினும், அறனல்லன மீது செல்லினும் அதை அடக்கி ஆளுதல் வேண்டும். அவ்வாறு ஆசையை வென்று அடக்கியவரே, உலகில் விழுமிய நிலை அடைவர். ஆனால், அந்த ஆசையை அடக்குவது அத்துணை எளிதன்று: அதை அடக்கி ஆளவல்ல ஆண்மை, அறிவு ஒன்றற்கே உண்டு; ஆசையை, அது சென்றவிடத்தில் செல்லவிடாதும், தீயவற்றின்பால் செல்வதைத் தடுத்தும், நல்லவற்றின் பால் செல்லவிடவல்லது அறிவு ஒன்றே. ஆசை அறிவிற்கு எளிதில் அடங்கி விடுவதில்லை; ஆசையை அடக்க அறிவு மேற்கொள்ளும் போரில், அவ்வறிவு ஆசைக்குத் தோற்று அடிமையாகி விடுதலும் உண்டு. ஆனால், வெற்றி தோல்வி காணும்வரை, அவை மேற்கொள்ளும் போராட்டம், அம்மம்ம! கொடிது கொடிது! மனப் போராட்டம்