பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

இலங்கைக் காட்சிகள்

ஆனால், இலங்கையின் அதிசயங்களில் ஒன்றாகிய கதிர்காமத்துக்குச் செல்கிறவர்கள் அங்குள்ள கோயிலைக் காணலாம்; தீர்த்தத்தைக் காணலாம்; மூர்த்தியைக் காணமுடியாது. "கதிர்காமத்தைக் கண்டேன்; ஆனால் காணவில்லை" என்றே சொல்லவேண்டி வரும், மர்மரகசியம், மூடுமந்திரம், விளங்காத புதிர், விடை காண முடியாத பிரச்னை என்று உள்ள வார்த்தைகளையெல்லாம் தொகுத்து அடுக்கிச் சொல்லுங்கள். அத்தனைக்கும் உறைவிடம் கதிர்காமம் !

நானும் கதிர்மாம் போனேன். பல சமயங்களில், தலயாத்திரை செய்கிறவர்களுக்குக் கோயில் முழுவதையும் பார்க்க முடிகிறதில்லை. சுவாமியையே தரிசிக்க முடியாமற் போகிறது. திருவிழாக் காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி முட்டி மோதிக் கொண்டு தங்கள் பக்தியைக் காட்டிக் கொள்ளும் இடங்களில் மனிதர்களையே நன்றாகப் பார்க்கலாம்; கடவுளைப் பார்ப்பது அருமை. எப்படியாவது கோயிலுக்குள் நுழைந்து விட்டாலோ சாம்பிராணிப் புகையின் இடையிலும் கற்பூரப் புகையின் இடையிலும் இறைவனுடைய திருவுருவத்தை எளிதிலே கண்டு விட முடியாது. எந்தத் தலத்தையாவது நன்றாகத் தரிசிக்கவேண்டுமானால் உற்சவகாலங்களில் போகவே கூடாது. அப்போது நின்று நிதானமாக எல்லாவற்றையும் பார்ப்பதற்கு இயலாது. உற்சவம் இல்லாத காலங்களில் போனால் ஊரையும் பார்க்கலாம்; ஆலயத்தையும் பார்க்கலாம்; மூர்த்திகளின் தரிசனமும் நன்றாகக் கிடைக்கும். குருக்களையாவும் நம்மோடு ஆறுதலாகப் பேசி விஷயத்தை விளக்குவார். இதை அன்பர்கள் அநுபவத்தில் உணர்வார்கள்.