பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இலங்கைக் காட்சிகள்

அருகில் வீரகேசரி ஆசிரியர் உட்கார்ந்திருந்தார். "இந்த மாவலிகங்கையைப் பற்றி ஒரு பாட்டுக் கேட்கிறீர்களா?" என்றேன்.

"சொல்லுங்கள்" என்றார் அவர்.
பாட்டைச் சொன்னேன் :

காவி போர்த்து நலம்காட்டிக்
கவினும் ஈரம் காட்டிஎங்கும்
மேவித் தங்கா தேஓடி,
விளையும் அழுக்கை அகற்றிவரும்
ஆவி அணையாய், மாவலிகங்
கைப்பேர் கொண்ட அணியாறே,
பாவும் உன்னத் துறவரசாப்
பகர்ந்தால் ஏதும் பழுதுண்டோ?

[காவி - காவி நிறம், காவியுடை. நலம் - அழகு, நன்மை. ஈரம் - குளிர்ச்சி, அன்பு.]

பாட்டைக் கேட்டு ரஸித்த அன்பர். "இந்த ஆற்றில் முதலை உண்டு” என்றார்.

உடனே? "அப்படியா! அதையும் பாட்டில் வைத்துப் பாடிவிட்டால் போகிறது” என்றேன். "உள்ளே, மேவும் முதலை இலங்க வைத்து" என்று பாட்டைச் சற்று மாற்றினேன். 'நீருக்குள்ளே இருக்கும் முதலையை விளங்கும்படி வாழவைத்து' என்பது ஆற்றுக்கு ஏற்ற பொருள். முதல் என்பது பரம்பொருளாகிய கடவுளுக்கு ஒரு பெயர் அல்லவா? மனத்துக்குள்ளே விரும்பும் பரம்பொருளைப் பிரகாசிக்கும்படி வைத்து என்று துறவிக்கு ஏற்றபடி வேறு ஒரு பொருளும் அந்தத் தொடருக்கு அமைந்தது. முதலையையும் வைத்து மாற்றிய பாட்டைச் சொன்னேன்.