பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

இலங்கைக் காட்சிகள்

அதை மறைக்கிறது. ஆனாலும் அதன் ஓசை காதுக்கு இனிமையாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மலைப் பகுதிகளில் மனிதனுடைய பாதுகாப்புக்கு அவசியமே இல்லாமல் தாமாக வளர்ந்த மரங்களுடனும் செடிகளுடனும் பிராணிகளுடனும் அது இடைவிடாமல் பேசிக்கொண்டே போகிறதோ?

திருமுருகாற்றுப் படையில் பழமுதிர் சோலையில் உள்ள அருவியைப்பற்றி நக்கீரர் மிக அழகாக வருணித்திருக்கிறார். அது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. "இது என்ன பைத்தியக்காரத்தனம்! பலா மரத்தைக் கண்டால் சீவகசிந்தாமணியும், காடுகளைக் கண்டால் சங்கச் செய்யுளும், அருவியைக் கண்டால் திருமுருகாற்றுப் படையும் நினைவுக்கு வருவதாகச் சொல்கிறீர்களே!" என்று நண்பர்கள் கேட்கலாம். நான் என்ன செய்வேன்! இதைத்தான் வாசனை, வாசனை என்று சொல்வார்கள். நான் அந்தப் புத்தகங்களைப் படித்தது முந்தி; ஆகையால் இப்போது இந்தக் காட்சிகளைப் பார்க்கிறபோது படித்தது நினைவுக்கு வருகிறது. முந்தி இந்தக் காட்சிகளைக் கண்டிருந்தேனாகில், புத்தகங்களைப் படிக்கும்போது, "ஆகா! எல்லாம் இலங்கையின் இயற்கை எழிலைப்பற்றியே சொன்னதுபோல் இருக்கின்றனவே!" என்று ஆச்சரியப்பட்டிருப்பேன். மறுபடியும் திருமுருகாற்றுப் படையைப் பற்றிச் சொல்வதற்காக நண்பர்கள் என்னை மன்னிக்கவேண்டும். பழமுதிர் சோலையில் அந்த அருவி மலையின் உச்சியிலிருந்து ஓடிவருகிறதை நக்கீரர் பாடுகிறார். வழியிலே இருக்கும் மரங்களுடனும் விலங்குகளுடனும் உறவாடியும் விளையாடியும் மோதியும் பொருள்களைப் பறித்தும் அருவி ஒய்யாரமாக வருகிறதாம். அகிலைச்