பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

இலங்கையில் ஒரு வாரம்

களைக் கடந்து தமிழ் மக்களை ஒன்று சேர்த்து ஒருமைப்பாட்டை நிலை நாட்டக்கூடிய சக்தி தமிழுக்கு உண்டு என்பது என்னுடைய தீர்ந்த கருத்து. இதற்கு ஒரு அத்தாட்சி யாழ்ப்பாணத்திலும் கிடைத்தது பற்றி நானும் குதூகலமடைந்தேன்.

ஆனால் எங்களுடைய குதூகலத்தைக் கொஞ்சம் குறைப்பது என்று கங்கணங் கட்டிக்கொண்டு நண்பர் திரு. அம்பிகைபாகன் எழுந்து நின்றார். அவர் திருவாரூரில் நடந்த தமிழ் விழாவுக்கு வந்திருந்தவர். எனவே, அவர் ஓர் எச்சரிக்கை விடுத்தார். “தமிழ் விழா நடத்துவது என்றால் எளிதில்லை. அதற்குப் பணம் வேண்டும், பிரயத்தனம் வேண்டும், பலருடைய கூட்டுறவு வேண்டும்; ஊக்கம், உற்சாகம், ஆள்கட்டு வேண்டும். இருப்பது, முப்பதினாயிரம் ரூபாய் வரையில் செலவு ஆகும். இதெல்லாம் நம்மால் ஆகக்கூடிய காரியா? யோசித்து முடிவு செய்யுங்கள்” என்றார்.

இதற்குத் தகுந்த பதில் கூறினார் ஸ்ரீ காராள சிங்கம் என்னும் அன்பர். “இந்த ஈழ நாட்டில் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் செய்து கொடுப்பதற்குச் சில தமிழர்கள் ஒரு லட்சம் ரூபாயும் அதற்கு மேலும் செலவு செய்கிறார்கள்! அப்படியிருக்கும்போது, நமது தமிழ்த்தாயை இங்கு அழைத்து உபசரிப்பதற்கு எல்லாத் தமிழர்களும் சேர்ந்து ஒரு முப்பதினாயிரம் ரூபாய் கொடுக்கமுடியாதா? முடியும். இப்படிப்பட்ட சிறந்த திருப்பணிக்கு இந்நாட்டில் பணம் சேராது என்று சந்தேகிப்பதே அவமானமான காரியம்! விழாவை நடத்தியேயாக வேண்டும்!” என்று ஸ்ரீ காராளசிங்கம் கர்ஜித்தார்.