பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இலட்சிய வரலாறு, அண்ணாதுரை


ராஜாக்களும், பட்டமகிஷிகளும் இல்லை! அலங்கார புருஷரும் அவரை அடக்கியாளும் மெழுகுபொம்மைகளும் இல்லை! ஒரே ஒருமோட்டார்! இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது; அதுவும் வாடகை வண்டி!

பதவிபெறப் பாதை வகுத்தனரா? இல்லை! இருக்கும்பதவியை விட்டுவிடு, இல்லையேல் விலகிநில் என்று கூறினர்! தேர்தல் முஸ்தீப்புகள் உண்டா? இல்லை! தீண்டினால் திருநீலகண்டம்!! மாஜி மந்திரிகள் உண்டா? தென்படவில்லை! மிட்டா மிராசுகள் உண்டா? இல்லை! காருண்ய மிகுந்த' சர்க்காருக்குக் காவடி தூக்குவோர் உண்டா? இல்லை! வேறு யார் இருந்தனர்? வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! அவர்கள் கூடிப்பேசி வகுத்த வழி என்ன? "நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பதும் தெரிந்தோம்" என்று கூறினர். ‘கொலைவாளினை எடடா! ‘மிகு கொடியோர் செயல் அறவே’ என்று பாடினர். "திராவிடத்திருநாட்டினிலே ஆரிய அரசா? அதற்குப் பார்ப்பன முரசா?" என்று கேட்டனர். சர்க்கார்சனாதனத்துக்கு இடந்தரும் போக்கைச் சாடினர்; பெரியாரே, இப்பெரும் படைக்குகந்த தலைவர் என்று தேர்ந்தெடுத்தனர். களம் காட்டுக என்று முழக்கமிட்டனர், கடும் பத்தியத்துக்கெல்லாம் தயார் என்று உறுதிமொழி பூண்டுவிட்டனர்; போயுள்ளனர். தத்தமது பட்டிதொட்டிகளிலும், திராவிடரின் விடுதலைப் படையிலே நாங்கள் பெயரைப் பொறித்து விட்டோம்! எந்தச் சமயத்திலே அழைப்பு வருமோ அறியோம். வந்தால், வாளா யிரோம். அது மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலையாக இருக்கக்கூடும். எதுவாக இருக்குமோ தெரியாது ஆனால் எதற்கும் நாங்கள் தயார் என்று உறுதி கூறிவிட்டோம் " என்று உரைத்திடுவர். திருச்சி, தீரர்களின் அணிவகுப்பைக் காட்டிவிட்டது! இரயில்வே வசதிக் குறைவு. கால நிலைக் கோளாறுகள் இவ்வளவையும் பொருட்படுத்தாமல், அங்கு கூடிய ஏறக்குறைய நாற்பது ஆயிரம் மக்களும், நமது நாட்டு விடுதலைக்கான படை; அதனைத் தடுக்கும் தடை இருக்க முடியாது.