பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இலட்சிய வரலாறு


கம்யூனிஸ்ட், சோஷியலிஸ்ட், இந்துமகாசபை, வருணாஸ்ரம சுயராஜ்ய சங்கம், பிராமண பாதுகாப்புச் சங்கம், மிதவாத சங்கம், முஸ்லீம் லீக், கிறிஸ்தவ சங்கம், தாழ்த்தப்பட்டவர்கள், ஷெடியூல் லீக் முதலாகியவைபோலும் ஒருகட்சி ஸ்தாபனமல்ல என்றும் சொல்லுகிறேன். எப்படி எனில், இக்கழகம் மக்கள் அறிவுத்துறையிலும், சமுதாயத்திலும், மதத் துறையிலும், கடவுள் துறையிலும், நீண்டநாட்களாக இருந்துவரும் மடமைகளையும், முன்னேற்றத் தடைகளையும், குறைபாடுகளையும் நீக்கவும், மக்கள் யாவரையும் ஒன்றுபடுத்தி ஒருசமுதாயமாக ஆக்கவும், சிறப்பாக நமக்கு- திராவிடமக்களுக்கு- இருந்துவரும் சமுதாய இழிவு, மத மூட நம்பிக்கை, ஜாதிப்பிரிவு வேறுபாடு அடியோடு அழிக்கப்பட்டு, ஆரியக்கொடுமையிலிருந்து மீளவுமே பாடுபட்டு வரும்படியான- அதாவது, மக்களுக்கு வலியுறுத்திவரும்படியான- ஒரு ஸ்தாபனமாகும்.

திராவிடர் கழகத்திற்கு சுயராஜ்யம் பெறவேண்டும் என்கிற ஒரு கற்பனைத்தத்துவமோ, தேர்தலுக்கு நின்று மெஜாரிட்டியாகி, "அரசியலைக்" கைப்பற்றவேண்டும் என்கிற தப்புப் பாவனையோ இல்லை. ஏனென்றால், இன்று நாட்டில்நடப்பது சுயராஜ்யம் என்றுதான் சொல்லப்படுகிறது. அன்னியனான வெள்ளையன் (பிரிட்டிஷார்) ஆதிக்கம் போய்விட்டது. திராவிட நாட்டுக்குத் திராவிட மக்களே முதல் மந்திரி, இரண்டாம் மந்திரி, மொத்தத்தில் 13-இல் 10 மந்திரி திராவிடர்கள் என்று சொல்லும்படியான திராவிட மெஜாரிட்டி மந்திரிசபையாக இருக்கும்போது, இனிச் சுயராஜ்யம் பெறுவது என்பதற்கு வேறு கருத்து என்ன இருக்கமுடியும்? யார் பெறுவது? அரசியலைக் கைப்பற்றுவது? யாரிடமிருந்து யார் கைப்பற்றுவது? திராவிட மக்கள் அல்லாதவர்கள் கைக்கு இனி அரசியல் எப்படிப்போகும்? ஆகவே, சுயராஜ்யம் பெறுவது என்பதோ, அரசியலைக் கைப்பற்றுவது என்பதோ இனி அர்த்தமற்ற பேச்சுகளாகும்; அர்த்தமற்ற காரியங்களுமாகும்.