பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 ★ இல்லம்தோறும் இதயங்கள்


“உம்....”

கம்பவுண்டர் வாலிபன் போய்விட்டான்.

மாலைப் பொழுதும் அவளைப்போல் மயங்கி, அவள் முகம்போல் இருண்டது.

மணிமேகலை ஸ்விட்சைப் போட்டாள். அவசரக் கோலத்தில் புடவைகளை அங்கங்கே போட்டிருந்தார்கள். அவற்றை எடுத்து ஒழுங்குபடுத்தினாள். பூட்ஸ்களோடு போன கால்கள் கழட்டிப் போட்ட செருப்புகளை எடுத்து சட்டப் பலகையில் வைத்தாள். வராந்தாவில் எதுவும் கீழே கிடக்கிறதா என்று பார்த்த போதுதான், அவளுக்கு மாமனார் ஞாபகமே ஏற்பட்டது. உடனே அவசர அவசர மாக, ஹார்லிக்ஸ் கலந்து மாமாவிடம் கொண்டு வந்தாள்.

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த கிழவர், டம்ளரை மெளனமாக வாங்கிக் கொண்டார். மணி மேகலை குத்துக்காலிட்டு உட்கார்ந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டாள். முட்டிகளை தேய்த்துவிட்டாள்.

அவளையே பார்த்த அந்த கிழவரின் உதடுகள் துடித்தன. வார்த்தைகள் அவரது வயதையும் மீறிய வலுவோடு வந்தன.

“பாவி மகளே! நீ வாழ்ந்த அருமை என்ன, வாழ்விழந்த கொடுமை என்ன ? ஈ எறும்பயும் மிதிக்காம பாத்து நடக்கும் உன்னை, ஈ எறும்பு மாதிரி மிதிக்காங்களே. நீ ஒண்ணு சேர்த்த மனுஷங்களே ஒன்னைத் தனியாய் பிரிச்சி வச்சிட்டாங்களே. ஆண்டவா ! இதையும் நான் பார்த்துகிட்டு இருக்கணுமாடா? இன்னுமாடா நான் இருக்கணும்? இன்னுமாடா நான் இருக்கணும்? வாழ்ந்ததுலயும் கணக்கில்லாம, செத்ததுலயும் கணக்கில்லாம போயிட்டாளடா! போயிட்டாளடா !”