பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 105


மணிமேகலை குழந்தையானாள். அந்தக் கிழவரின் கால்களைக் கட்டிக்கொண்டே “மாமா... மாமா...” என்றாள். பிறகு, அவர் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டே “அப்பா! அப்பா !” என்றாள். அவர் நெற்றியில், தன் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே “அம்மா அம்மா” என்றாள். அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே “ஆண்டவா! ஆண்டவா!” என்றாள்.

10

‘கம்பவுண்டர்’ மணி, திருவள்ளூர் டாக்டரைப் பற்றிச் சொன்னது, ஒரு குறைந்த மதிப்பீடு என்பதை அவரிடம் போய்விட்டு வந்தவர்கள் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு வரும்போதே அவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள். படுக்கையறைக்குள் புரண்டு கொண்டிருந்த மணிமேகலை, தன் குழந்தையைப் பார்ப்பதற்காக வெளியே ஓடி வந்தாள். ராமபத்திரன் அவளைப் பார்த்ததும் பேச்சின் ஒலியைக் கூட்டினார்.

“பாத்தியளா, நான் சொன்னபடியே டாக்டர்கிட்ட காட்டுனது நல்லதாப் போச்சி பாத்தியளா ! நீங்க, இவளுக்கு வந்தத லேசா நினைச்சதுக்கு எப்படி கண்டிச் சாரு பாத்தியளா?”

மாமியார்க்காரி தம்பிக்கு தவிலடித்தாள்.

“இனிமேயாவது ஒன் பேச்ச இவங்க கேட்காங்களான்னு பார்ப்போம். ஒன் பேச்ச மட்டும் முதலுலயே கேட்டிருந்தா இந்த கதிக்கு வந்திருக்காண்டாம்.”

“அதுக்காக பதினைந்து நாளைக்கு ஒரு தடவ, எல்லாரும் போய் உடம்பக் காட்ட முடியுமா? எவ்வளவு கஷ்டம்?”