பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 125


அவ்வளவுதான். ஒதுங்கி ஒதுங்கி நடந்துகொண்டிருந்த மணிமேகலை ஒடினாள். "அப்பா! அப்பா ! என்னப்பா! என்னை பெத்த என் அப்பா.." என்று கத்திக்கொண்டே பெரிய தெருவைக் கடந்து, காளியம்மன் சந்தைத் தாண்டி, தெற்குத் தெருவை விலக்கி, குட்டி எஸ்டேட்டாய் குலை தள்ளிய வாழைகளுடன் சற்று இலையுதிர்ந்து போன மாந்தோப்புக்கே மகுடம்போல் இருந்த வீட்டின் படிக்கட்டை மிதிப்பது வரைக்கும் அவள் ஓயாமல் ஓடினாள். சத்தம் போட்டுப் பேசுவதை அநாகரிகமாகக் கருதும் அவள் "அப்பா அப்பா" என்று ஐந்து வயதுக் குழந்தைபோல் கத்திக் கொண்டும், அறுபது வயது பாட்டி போல் தள்ளாடிக் கொண்டும் ஓடிவந்து, அப்பாவைப் பார்த்து, மூச்சைப் பிடித்தவள்போல், மூச்சு விட முடியாதவள் போல், திறந்த வாய் திறந்தபடி இருக்க, விழித்த விழி விழித்தபடி நிற்க, குவிந்த கை குவிந்தபடி இருக்க, அவள் அப்படியே நின்றாள். அப்பாவை வைத்த கண் வைத்தபடி பார்த்துக்கொண்டே நின்றாள்.

வராந்தாவை அடுத்து இருந்த அறையில் சிம்மாசனம் போலிருந்த கடைந்தெடுத்த தேக்குக் கட்டிலில் அவள் தந்தை மல்லாந்து படுத்துக் கிடந்தார். கண்கள் நிலைகுத்தி நின்றன. தோள் துவண்டிருந்தது. கை கால்கள் மடங்காமல், மடக்க முடியாதபடி மரக்கம்புகள் போல் கிடந்தன. உடம்பில் சூடு இருந்தாலும் உணர்வு இல்லை. மூச்சு மட்டும் கொல்லர் உலைபோல இழுத்து இழுத்து பெரிதாக வந்தது. உச்சந்தலை தலையணையில் பதிய, மோவாய் முன்னால் தூக்கி நின்றது. வேட்டி முழுவதும் நனைந் திருந்தது. வாயில் கொசுக்கள், கண்ணிலும் கொசுக்கள்.

கடந்த ஒரு மாத காலமாக உயிரே இல்லாதது போல் ஆடாமல், அசையாமல் உணர்வற்றுக் கிடந்த அந்த ஜீவன் எதிரில் யார் நின்றாலும் பாராததுபோல் தோன்றிய அந்த முதிய உயிர், இப்போது மகளை அடையாளம்