பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 149


வாங்கிக்கிட்டு வாரேன் என்று சொல்வான் என்று எதிர் பார்த்தாள். அவன் அப்படிச் சொல்லவில்லை. ஒருவேளை நேற்றுச் சொன்னதே போதாது என்று நினைத்தவன்போல் அவளை விழி பிதுங்க முறைத்துக்கொண்டே ஒரு ஈஸிசேரை மடக்கித் தூக்கிக்கொண்டே தோப்புப் பக்கமாகப் போனான். நாற்காலியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கையிலிருந்த கற்றையில் ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தான்.

அவன் போவதை கண்களால பின்தொடர்ந்த மணிமேகலை, அவன் எதைப் படிக்கிறான் என்பதை யூகித்துக் கொண்டாள். மடமடவென்று அவனருகே போய் நின்றாள். சந்திரன் அந்த மகாபெரிய ரகசியக் கடிதத்தை மூடினான்.

"பாமா எழுதுன லட்டருங்களா?”

“எதுவோ ஒண்ணு."

"இந்தா பாருப்பா பாமா நேற்றுவரை உன் காதலியாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு அவள் இன்னொருவனுடைய மனைவி. அவள் கடிதம் ஒன்கிட்ட இருக்கது தப்பு."

"தப்போ சரியோ, அவள் எனக்கு எழுதுன லட்டருங்க. இதுல தலையிட ஒனக்கு உரிமை கிடையாது.”

"நீ தரப்போறியா, இல்லியாடா ?”

"இதுதான் நான் சாவுறது வரைக்கும் ஆறுதல் தரப் போற கடிதங்கள். இதைவிட நீ என் உயிர எடுத்துக்கலாம்."

"வசனம் பேசாம லட்டருங்கள கொடுடா !”

"நான் ஒன்னை மாதுரி மரக்கட்டை இல்ல."

"மிஸ்டர் சந்திரன்! நான் இப்போ ஓங்களோட அக்கா என்கிற முறையில கேட்கல. ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டிய இன்னொரு பெண்