பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 ★ இல்லம்தோறும் இதயங்கள்


“இந்தாம்மா! இதுல ஒன் நகை எல்லாம் இருக்கு. நேற்று நான்தான் பாங்ல போய் மீட்டிக்கிட்டு வந்தேன். இந்த பர்ஸ்ல பத்தாயிரம் ரூபாய் இருக்கு மீதியை நானே அங்க வந்து முடிக்கிறேன். மாமாவை நம்பும்மா!”

“ஏதோ வயித்தெரிச்சலில் தாரேன்னோ, வெறுமையில தாரேன்னோ நினைக்காதம்மா, நீ, மாதா மார்க்ரெட்டுக்குப் பதிலா வந்திருக்கிற என்கிறது எனக்குத் தெரியும்மா. அந்த புண்ணியவதி கிட்டதாம்மா நான் ஆரம்பத்துல வேலை பார்த்தேன். மதுராந்தகத்தில் காய்கறி கடை போட்டிருக்கையில் அந்த புண்ணியவதிக்கு காய்கறி கொடுத்தவன் நான். அதோட ஒங்க அப்பாவுக்கு நான் சளைச்சவன் இல்ல. ஒனக்கும் இங்க உள்ளதுல எல்லாத்துலயும் பங்குண்டும்மா. உன் வயிறு எரிஞ்சா, இந்தப் பய மவனுவளும் எரிஞ்சி போயிடுவாங்க! அவங்களும் நல்லா இருக்கணுமுன்னு வாழ்த்தும்மா! ஒன்னை அவங்க படுத்துனபாடு, அவங்க மேல பாவமா போயிடக் கூடாதுன்னு ஆசீர்வாதம் பண்ணும்மா!”

மணிமேகலை, மாமாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு விம்மினாள். கிழவர் இப்போது “என் தாயே! என் தாயே! எங்களை மறந்துடாத தாயே!” என்று மன்றாடினார். ஆனானப்பட்ட ரத்தினங்கூட பிரமிப்பில் தானாக எழுந்தான்.

சிறிதுநேரம் மெளனம் கொடிகட்டிப் பறந்தது.

மணிமேகலை, மாமாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு காரில் ஏறினாள். மாமியார்க்காரி “நாளைக்கு ஒன் பையன் வந்துடுவான். பார்த்துட்டு போயேன்” என்றாள். அப்படிச் சொல்லியாவது கொடுக்க வேண்டியதைக் குறைக்க நினைத்தாளா அல்லது நிஜமாகவே, கணவரின் பேச்சு அவளைக் கலக்கி மாற்றி விட்டதா என்பது புரியவில்லை.