பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ♦ இல்லம்தோறும் இதயங்கள்

 நினைச்சுட்டேன். நகரத்தைவிட ஒருவகைல இங்கதான் நாகரிகம் பண்பாடே இருக்கு. சந்திரன்னு ஒரு பேரு கிராமத்துல இருக்குமுன்னு நான் நினைக்கக்கூட இல்ல. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே அந்தப் பேரு இருக்குதுன்னா, அது பெரிய விஷயம். ஆமா, உங்க பேரு நிஜமாகவே சந்திரன்தானா?”

“பின்னே என்னவாம்? எங்கப்பா இதைவிட நல்ல பேரு வைக்கணுமுன்னு சொன்னாராம். அம்மாதான் சந்திரன்னாங்களாம்.”

“பொய்! சுத்தப் பொய்! இவன் பேரு ஹரிச்சந்திரன். இவனே ஹரியை இன்னொரு அவதாரம் எடுக்கச் சொல்லிட்டு, சந்திரன்னு எஸ். எஸ்.எல்.சியில் மாத்திக்கிட்டான்.”

இருவரும் திடுக்கிட்டுத் திரும்பியபோது, மணிமேகலை அங்கே சிரித்துக்கொண்டு நின்றாள். சந்திரனுக்கு, தான் பற்றி இருந்த மோதிரக்கையை விட வேண்டும் என்ற சுரணை வரவில்லை. பாமாதான் தன் கையை வன்முறைப் பிரயோகத்தால் விடுவித்துக் கொண்டு கையை நான்கைந்து தடவைகள் உதறினாள். மணிமேகலை மேலும் சிரித்தாள். பாமாவைப் பார்த்துக்கொண்டே, “என்ன பண்றது... காதல்னு வந்துட்டால் ஹரிச்சந்திரன் கூட பொய் சொல்லுவான் போலுக்கு... ஆனால் இது பாசத்தால் வந்த பொய். நன்மை ஏற்படுறதாய் இருந்தால் பொய் சொல்லலாமுன்னு திருக்குறள்ல படிச்சிருக்கோம். இவன்... படித்தபடி நடக்கிற பையன்” என்றாள்.

“சின்ன விஷயத்துக்கா பொய் சொல்றது” என்று பாமா சிணுங்கியபோது, “ரொம்பவும் அலட்டிக்காதம்மா.. ஒரு காலத்துல ஹரிச்சந்திரன்மாதிரி நடக்கிறவங்களப் பார்த்துச் சிரிச்சாங்க. இப்போதான் காலம் முன்னேறிட்டே. ஹரிச்சந்திரன் என்கிற பேரை