பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 ★ இல்லம்தோறும் இதயங்கள்


என்று வெளிமனம் பாசாங்கு போட்டாலும், உள்மனம் பிரச்னையின் கனபரிமாணத்தைக் கண்டுகொள்ளப் பயப்படுவதுபோல் தெரிந்தது.

ஜெயராஜ் காரை ஓட்டினான். சுருள்முடி, தலையில் கிரீடம்போல் தோன்ற, ‘போட்டோ ஜீனிக்’ முகம்-வட்டமான அந்த அழகு முகத்தை, அப்படியே உள்ளங்கையில் ஏந்திக் கொள்ள வேண்டும்போல், அவளுக்குத் தோன்றியது. முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்த மனைவியிடம், “நீ போன பத்து நாளும்... பத்து...” என்று சொல்லிக்கொண்டு போனவனை “மணி மாதிரி போயிட்டுதா” என்று அவன் கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்யும் பள்ளிப்பாலகி மாதிரி சொன்னபோது, ஜெயராஜ் ‘ஸ்டேரிங்கை’ திருப்புகிற சாக்கில் அவள் தோளில் இடித்தான். பின்னால் இருந்த இந்த பாமாவும் அண்ணன் மகனுக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் பிரச்னையைத் தொடாமல், தன்னை மட்டும் தொடுவதை உணர்ந்த மணிமேகலை “என்ன பிரச்னை?” என்றாள்.

“எங்க அண்ணாவ பழையபடியும் முருங்கை மரத்துல ஏத்தப் பாக்குறாங்க..”

“யாரு?”

“வேறு யாராய் இருக்கும்? எல்லாம் அவரோட அருமை மாமனார் ராமபத்திரன்தான்.”

“என்னவாம்?””

“பாகத்தைப் பிரித்துக் கொடுக்கணுமாம்.”

"அதெப்படி முடியும்?”

“நாங்க முடியாதுன்னு சொன்னோம்.”

“சொன்னிங்களா? சொல்றீங்களா?”

"சொன்னோம்.”