பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம் ★ 55


காரங்கள எதுக்காவ வீட்ல வச்சிருக்கணும்? எங்க பாகத்தை பிரிச்சிக் கொடுக்க வேண்டியதுதானே?” என்று சொன்னாள். சொன்னதை அழுத்தந் திருத்தமாகச் சொல்லவில்லையே என்று மோவாயைத் தண்டிப்பவள் போல், கையை அதில் வைத்து இடித்துக்கொண்டே அவள் போனாள். எங்கேயோ போனாள்.

இதற்குள், “எமகண்டம் வரதுக்குள்ள முடிச்சிடலாம்” என்றார் ராமபத்திரன். இவரும் முன்னாளய தூத்துக்குடிவாசிதான். அக்காள் புருஷனின் மளிகைக் கடையில் எடுபிடி வேலை செய்ய வந்து, அவரது தங்கையையே மனைவியாக்கி அரவை மிஷினும், மளிகைக் கடைகளும், கட்டைத் தொட்டிகளும், கசாப்புக் கடைகளும் வைத்து முன்னேறி, தன் மகள் லட்சுமியை மைத்துனன் மகனுக்குக் கொடுத்தவர். ‘எஞ்ஜினியர் உருப்படுவான்’ என்று கொடுத்தார். ஆனால் இந்த மருமகன் சங்கரனோ, சங்கரா... சங்கரா... அதை ஏன் சொல்லணும்? ‘என்னைக்கும் குடும்பத்துல இருக்கையிலேயே, குறியா துட்ட ஒதுக்கணும். தனியா அமுக்கணும். ஆபத்துக்கு அப்பா தம்பி உதவ மாட்டான். பணந்தான் உதவும். நான் மட்டும் மச்சான் கடையில துட்ட ஒதுக்காட்டா இப்டி ஆவ முடியுமா? அவரு தங்கையைப் பிடிக்க முடியுமா? இது தெரியமாட் டக்கே இவனுக்கு எப்போ உருப்பட? எப்படி உருப்பட?’

உருப்படாமல் போய்க் கொண்டிருக்கும் மருமகனை உருப்பட வைக்க நினைத்த ராமபத்திரன், பாகப்பிரிவினை செய்தால்தான் மகளுக்கு விமோசனம் பிறக்கும் என்று நினைத்தார். அண்ணன் தம்பிக்கிடையே சண்டை, மாமியார் மருமகளுக்கிடையே சண்டை முதலியவைகளை மூட்டி அவர்கள் அசரும்போது தானும் வந்து “என் மவள பாழுங் கிணத்துல தள்ளிட்டேனே” என்று சொல்லி சண்டை போட்டு நிலைமையை இந்த அளவுக்கு ‘முன்னுக்குக்’ கொண்டுவந்த புண்ணியவான் அவரு.