பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 ★ இல்லம்தோறும் இதயங்கள்


கள். சின்ன மைத்துனன் பாஸ்கரும், குட்டி மைத்துணி இந்திராவும், "ஜாலிதான்... நாளைக்கு ஸ்கூலுக்கு போகாண்டாம்” என்றார்கள்—எக்ஸிபிஷனுக்குப் போவதைவிட, பள்ளிக்கூடம் போகாமல் இருப்பதில் அதிக இன்பம் கண்டவர்கள்போல.

பொழுது இருட்டிக்கொண்டிருந்த போது, லட்சுமியின் தங்கையும், ராமபத்திரனின் இரண்டாவது புத்திரியுமான வசந்தி வந்தாள். எஸ்.எஸ்.எல்.சி.யை நாலைந்து தடவை பார்த்தவள். நல்ல சிவப்பு. நல்ல உடல்வாகு. இப்போது இருபத்திரண்டு வயது இருக்கும். எவரையும் கவிழ்ந்து கொண்டே பார்க்கிறவள். பேசும்போது, பெருவிரலால் தரையில் வட்டம் போடுபவள்.

மணிமேகலை கடிதத்தை எழுதி, மாமனாரிடம் கையெழுத்து வாங்கி தபால் பெட்டியில் சேர்ப்பித்துவிட்ட திருப்திச் சிரிப்போடு, அடிக்கடி வரும் வசந்தியை அப்போதுதான் வருபவள்போல் வரவேற்றாள்.

“வாம்மா! நாளைக்கு கார்ல மெட்ராஸ் போய், எக்ஸிபிஷன் பார்க்கப் போறோம். வாரியா?”

““எத்தன பேரு போறிங்க?”

“மாமா தவிர, எல்லாரும்.”

“கார்ல இடம் இருக்காதே.”

“அதுக்கு நானாச்சு. அப்படியே இடம் இல்லாட்டா என்னோட இடத்த ஒனக்குத் தாரேன்.”

அப்போது அங்கே வந்த பாமா, லேசாக முகத்தைச் சுழித்தாள். பிறகு சந்திரனை மீண்டும் நினைத்துக்கொண்டு எங்கேயோ போய்விட்டாள்.

அன்றைய இரவு, மறுநாள் காலைப் பொழுதாக மலர்ந்தது.