பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 ★ இல்லம்தோறும் இதயங்கள்


யாரும் யாருடனும் பேசவில்லை “என் ராசாத்தி.... ஒனக்கா... ஒனக்கா?” என்று மாமியார் லேசாக முனங்கிவிட்டு, மணிமேகலையின் கையைப் பிடித்தாள். பிள்ளைகள் எதுவும் புரியாமல், அதே சமயம் எதுவோ நடந்துவிட்ட திகிலில், லட்சுமியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டார்கள். தலையைக் குனிந்து புருவத்தை நெறித்துக் கொண்டிருந்த சங்கரன், சற்று சுதாரித்துக் கொண்டு “இப்போ அது வந்திருக்கு என்கிறது வெறும் யூகந்தான். அப்படியே இருந்தாலும், ‘பேஸ்’ பண்ணித்தான் ஆகணும். ஆல்ரைட் டேய் ஜெயராஜ் நாங்க டிரெயின்ல போறோம். நீ காலையில இவள ஜி. ஹெச்ல பார்த்துட்டு வா? நான் வேணுமுன்னால்கூட இருக்கட்டுமா?” என்றான்.

எங்கும், எதிலும் உல்லாச ஓசைகளும், இனிய நாதங்களும், எக்காளச் சிரிப்புக்களும், இன்பமயமான சூழலும் நிலவிய அந்த பொருட்காட்சியில் இருந்து, அவர்கள் காட்சிப் பொருட்கள் போல் வெளியே வந்தார்கள். ‘இன்னும் பார்க்கணும்... இன்னும் பார்க்கணும்’ என்று அடம்பிடித்த சேகரை, லட்சுமி பட்டுப் பட்டென்று அடித்தாள். யாரும் அவளைத் தடுக்கவில்லை. ஏனென்று கேட்கவில்லை. மெளனமாக நடந்தார்கள். நடக்கமுடியாமல் தங்களைத் தாங்களே துக்கிக்கொண்டு போவது போல் நடந்தார்கள்.

அரக்கோணம் வழியாகப் போகும் எக்ஸ்பிரஸ்ஸில் அவர்களை ஏற்றிவிட்டுவிட்டு, மணிமேகலை மாமியாரிடம் இருந்த கைக் குழந்தையை வாங்கி, மார்போடு அணைத்துவிட்டு, அந்தச் சாக்கில் அவன் தலையில் தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, மகனை மீண்டும் மாமியாரிடம் ஒப்படைத்தாள்.

ஜெயராஜூம், மணிமேகலையும் ரயில் நிலையத்திற்கு வெளியே வந்து காரில் ஏறினார்கள். இருட்டத் துவங்கி