பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ★ இல்லம்தோறும் இதயங்கள்


‘கடவுளே! செந்தூர் முருகனே... எனக்கு... எனக்கு இருக்கப் படாது’ என்று மனதுக்குள்ளே முட்டிக் கொண்டாள். ஜெயராஜ், தெரிந்தவர்கள் பார்த்துவிடக் கூடாதே என்று வலதுகையை மடித்து, முன் நெற்றியையும் பின் தலையையும் மறைத்துக் கொண்டான்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மணிமேகலையின் முறை வந்தது. ‘கடவுளே... கந்தனே... இது தோல் வியாதி யாகத்தான் இருக்கணும். இருக்கணும்’ என்று சொல்லிக் கொண்டே போனாள். அவளை, போகக்கூடாத ஊருக்கு வழியனுப்பி வைப்பவன்போல் ஜெயராஜ் கலங்கினான்.

அரைமணி நேரமாயிற்று. அவளைக் காணவில்லை. ஜெயராஜ் முரட்டுத்தனமாக உள்ளே போனான். மனைவிக்கருகே போய் உட்கார்ந்தான். டாக்டர் மைக்ராஸ்கோப்பில் தேடிக் கொண்டிருந்தார்.

பிறகு, அதை லேசாகத் தள்ளிவிட்டு, தன் சுழல் நாற்காலியில் உட்கார்ந்த டாக்டர், அவர்களது தோற்றத்தையும், தோரணையையும் பார்த்து ‘சூள்’ கொட்டிவிட்டு அவரே கொஞ்சம் எக்ஸைட் ஆனவர் போல பேசினார்.

“ஐ அம் ஸாரி ஸார்! இது அதுதான்! ஆனால் பயப்படும்படியாய் ஒண்ணுமில்ல. இப்போதான் துவக்கம். ‘பேச்ல’ கூர்மை இருக்கு. நிறமும் ஒயிட்டாய் மாறல. அதோட ஒரே ஒரு ‘பேச்’தான் இருக்கு. முகத்துல தடிப்பு இல்ல, மூக்குச் சளியிலயோ, ஸ்கின்னுலயோ கிருமி இல்ல. மைக்ராஸ்கோப்புல நல்லா பார்த்துட்டேன். டெய்லி ஐம்பது மில்லிகிராம் டேப்ஸோன் மாத்திரை, ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டால் போதும். மூணு மாதத்துல சரியாப் போயிடும். பட், மூணு வருவும் வரைக்கும் மருந்து சாப்பிடனும், டெய்லி ஒரே ஒரு மாத்திரதான்!”

“நாங்க யாருக்கும் எதுவும் பண்ணலியே டாக்டர்?”