பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 81


அவளுக்கு சற்று மகிழ்ச்சிதான். ஆனால் என்னமா நடிக்கிறார்? இவருக்கு, ஒரு காதுதானே வலிக்கதாய் சொல்வாரு. இப்பொ எப்படி ரெண்டு காதையும் காட்டணும். 'தம்பி மகள்கிட்ட' என்கிறாரே, நான் அந்நியம் என்கிறதை சொல்லாமச் சொல்றாரோ? ஒரு மாதத்துக்கு முன்னால சமையலறைப் பக்கம் போன போது. இனிமே நீ எங்களுக்கு உழச்சது போதும், நாங்க தான் ஒனக்கு உழைக்கணுமுன்னு சொன்னாரே. அதுல நான் 'கொடுத்து வச்ச மருமகள்’னு சந்தோஷப்பட்டேனே. அது தப்போ? சமையலறைக்குள்ள என்ன விடக் கூடாதுன்னு அப்படிப் பண்ணியிருப்பாங்களோ? நான் பறிச்சி கொடுத்த முருங்கை இலைகளை பார்த்துட்டு ஒரே புழும்மா...' என்று சொல்லி அவற்றை வெளியில் எறிந்தார்களே, அவர் எறிந்தது கீரைகளையா? அல்லது...

வெம்பிப்போன மாம்பழம்போல் முகம் மாற, அவள் தன் அறைக்குள் வந்தாள். கணவன் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனை அப்போதே எழுப்பி, அப்போதே சொல்லி அப்படியே கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.

அந்த இரண்டு நிமிட மனக் கலக்கத்தை பத்து நிமிடமாகப் போராடி அடக்கிக்கொண்டு கண்ணயர்ந்த கணவனையே பார்த்தாள். வெளிலே நிற்கும்போது, மல்லாந்து படுத்து ஏதோ ஒரு புத்தகத்தை படிப்பதுபோல் தெரிந்த கணவன் உடனடியாகத் தூங்கிவிட்டதில், அவளுக்கு அவன்மீது அனுதாபம் ஏற்பட்டது. படுத்தவுடனேயே தூங்கிவிடுகிற பழக்கம். சர்தார் படேலும், மகாத்மா காந்தியும் இப்படித்தான் தூங்கிவிடுவார்களாம். அவ்வளவு உறுதியான மனமாம்.

தலைவர்களோடு தன் கணவனை ஒப்பிட்டபோது மணிமேகலைக்குப் பெருமையாக இருந்தது. கொஞ்சம்