பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 ★ இல்லம்தோறும் இதயங்கள்


அனுதாபமும் ஏற்பட்டது. 'இனிமேல். வழியே இல்லை' என்பதுமாதிரி துக்கம் வரும்போதெல்லாம், இயற்கை தூக்கத்தைக் கொடுப்பது அவளுக்கே தெரியும். பாவம்! படுத்தவுடனே தூங்கிடுறாரே. இருக்காதா பின்னே. லேத் மிஷின் இன்னும் வரல. பெட்ரோல் விலை தீர்மானம் ஆகிறது வரைக்கும் பங்க் கிடைக்காதாம். இதுவாவது பிஸினஸ்; கவலயில்ல! பொறுப்புணர்வு. ஆனால் கட்டின மனைவிக்கு ஏற்பட்டிருக்கும் 'அதை' நினைத்தால் கவலை இருக்காதா? என்மேல உயிரையே வச்சிருக்கவரு. என் உடம்புக்கு வந்தத தன் உயிருக்கு வந்ததா நினைச்சுக்கிட்டாரு... எழுந்திருக்கட்டும். 'இப்படியா கவலப் படுறதுன்னு' நல்லா திட்டனும்,

மணிமேகலை அவனுக்கருகே ஒரு காலை தந்தையின் இடுப்பில் போட்டுக்கொண்டு தூங்கும், தன் மூன்று வயது மகனையே பார்த்தாள். முன்னால் துருத்திக்கொண்டிருக்கும் முடி அப்பாவைப் போன்ற உருண்டை முகம். அதே கம்பீரம். அம்மாவைப் போன்ற பப்பாளிப் பழநிறம். அளவுக்கு மீறி வருத்தப்படும் போதெல்லாம், கன்னத்தில் கைவைத்து நிற்கும் தன்னருகே வந்து முன் கைக்கும், தோளுக்கும் இடையே தலையைத் திணித்துக் கொண்டு அறிந்தோ அல்லது அறியாமலோ கையை அவன் எடுத்து விடுவான். அந்த நிமிடத்திலேயே அவன் தன்னையே மறந்துவிடுவாள். ஒசைப்படாமல் குழந்தையின் கன்னத்தில் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தபோது அவள் கைபட்டு தூக்கம் கலைந்து கணவன் எழுந்தான்.

லட்சுமி சொன்னதை கணவனிடம் சொல்லலாமா என்று அவள் யோசித்தபோது, ஜெயராஜ் மடமடவென்று எழுந்து ஹேங்கரில் தொங்கிய பேண்ட், சட்டையைப் போட்டுக் கொண்டான். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில், முன்பெல்லாம் அவள் கைகளைப் பிடித்திழுத்து தன்மேல்