காக்கை பாடினியம்
வெண்பாவின் இனம்
53. வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை என்றிம் முறையின் எண்ணிய மும்மையும் தத்தம் பெயரால் தழுவும் பெயரே.
179
-யா. வி. 56 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் வெண்பாவின் வகைகளைக் கூறி முடித்து, அதன் இனங்கள் இவையெனத் தொகுத்துக் கூறிற்று.
(இ -ள்.) வெண்பாவின் இனம், விருத்தம் துறை தாழிசை என்னும் இம் முறையால் எண்ணப்பெற்ற மூன்றும் பாவின் பெயரும் இனத்தின் பெயரும் தழுவி நின்ற பெயருடன் வரும் என்றவாறு.
வெண்பா என்பதை விருத்தம், துறை, தாழிசை என்னும் மூன்றுடனும் இணைக்க. இது முதனிலை விளக்காம். ‘தத்தம் பெயரால் தழுவும் பெயர்' என்றது வெண்பா விருத்தம் என்பது 'வெளி விருத்தம்' என்றும், 'வெண்பாத்துறை வெண்டுறை என்றும், வெண்பாத் தாழிசை வெண்டாழிசை' என்றும் பெறும் பெயர்களை.
வெண்பா அதிகாரப் பட்டமையால் அதனோடு இனம் மூன்றையும் இணைத்துக் கூறினார். இவற்றைப் பிற பாக்களொடும் சார்த்திக் கொள்ளுமாறே "முறையின் எண்ணிய மும்மையும் தத்தம் பெயரால் தழுவும்” என்றார் என்க.
தழுவிக் கொள்ளுமாறு :
ஆசிரியப்பாவின் இனம் ஆசிரியவிருத்தம், ஆசிரியத்துறை, ஆசிரியத் தாழிசை என்பன.
கலிப்பாவின் இனம், கலிவிருத்தம், கலித்துறை, கலித் தாழிசை என்பன.
வஞ்சிப்பாவின் இனம், வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வஞ்சித் தாழிசை என்பன. இவற்றைத், தத்தம் பாக்களைக் கூறுகின்றுழிக் கூறுதும்.
விருத்தம் துறையொடு தாழிசை என்றும் முறையின் என்ணிய என்றார் ; இம்முறையின் எண்ணாமையும் கொள்க.
என்னை?
விருத்தம் தாழிசை துறை என்றும், தாழிசை துறை விருத்தம் என்றும், பிறவாறும் எண்ணினார் உளர் ஆகலின் என்க.