உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

23

வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங் கொன்றையும் பிணியவிழ்ந்து, பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து, வண்டறைந்து தேனார்ந்து தேனார்ந்து வரிக்குயில்கள் இசைபாடத், தண்டென்ற லிடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவணதோர் மாணிக்கச் செய்குன்றின்மேல் விசும்பு துடைத்துப் பசும் பொன் பூத்து, வண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள் ; கண்டு பெரிய தோர் காதற் களிகூர்ந்து தன் செம்மலர்ச் சீறடிமேற் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மணிக் கொம்பர் நடைகற்பதென நடந்து சென்று நாண்மலர் கொய்தாள் ; கொய்து மரகத விளிம்படுத்த மாணிக்கச் சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டபத்துப் போதுறு கொழுநிழற்கீழ்க் கடிக் குருக்கத்திக் கொடிப்பிடித்துத் தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்து நான்று வந்திழிதரும் அருவி, பொன் கொழித்து மணிவரன்றி மரகதத்தொடு வயிரமுந்தி, அணிகிளரும் ஆடகப் பாறை மேல் அதிர்குரல் முரசின்கண் இரட்ட வண்டுந் தேனும் யாழ்முரல வரிக் குயில்கள் இசைபாடத் தண்டாது தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப்பாறை மணித்தலத்துமிசை நீல ஆலவட்டம் விரித்தாற்போலத் தன்கோலக் கலாவங் கொளவிரித்து முளை இளஞாயிறு இளவெயில் எறிப்ப ஓர் இளமயில் ஆடுவது நோக்கி நின்றாள்.

(6

அப்பால், தலைமகனும் பற்பல் நூறாயிரவர் கூர்வேலிளை யரொடு குளிர்மலைச்சாரல் வேட்டம்போய் விளையாடு கின்றான், ஆண்டெழுந்ததோர் கடுமாவின் பின் ஓடிக் காவல் ளையரைக் கையகன்று நெடுமான் தேரோடு பாகனை நிலவுமணற் கானியாற்று நிற்கப்பணித்துத் தொடுகழல் அடியதிரச் சுருளிருங் குஞ்சி பொன் ஞாணிற் பிணித்துக் கடிகமழ் நறுங்கண்ணிமேல் கொண்டு வண்டு மணனயர் அஞ்சாந்தின் நறுநாற்றம் அகன் பொழிலிடைப் பரந்து நாற அடுசிலையொடு கணையேந்தி வடிவு கொண்டகாமன்போலச் சென்று அவள் நின்ற இரும் பொழில் புகும். அஃதியாங்ஙனமோ எனின், வடகடலிட்ட ஒருநுகம் ஒருதுளை தென்கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற் போலவும் வெங்கதிர்க் கனலியும் தண்கதிர் மதியமும் தம்கதி வழுவித் தலைப்பெய்தாற் போலவும் தலைப்பெய் தொருவர் ஒருவர் நிமித்தமாகத் தமியராய் எதிர்ப்படும். என்னை?